சென்னை: ‘வில்லிசை வேந்தர்’ சுப்பு ஆறுமுகம் நேற்று முன்தினம் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் 1928-ம்ஆண்டு பிறந்தவர் வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94). இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சுப்புலட்சுமி, பாரதி என்ற மகள்களும், காந்தி என்ற மகனும் உள்ளனர்.
தனது 16-வது வயதில் ‘குமரன்பாட்டு’ என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்தவர் சுப்பு ஆறுமுகம். மதுரை தமிழ் சங்கத்தில் 3 ஆண்டுகள் படித்து தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்த அவர், வில்லுப்பாட்டு மூலம் சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே தேச பக்தியை வளர்த்தார்.
1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அவரை திரைப்படத் துறைக்கு அழைத்து வந்தார். மேலும், அதே ஆண்டில் ‘காந்தி மகான்’ என்ற கதையை எழுதினார். அந்தக் கதையை வில்லுப்பாட்டாகவும் நடத்தினார். இதுவரை ஆயிரக்கணக்கான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
தமிழக அரசிடமிருந்து ‘கலைமாமணி’, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருது, பத்மஸ்ரீ விருது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ் திரு விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி, உலகநாடுகள் பலவற்றிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை சுப்பு ஆறுமுகம் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் தனது மகளுடன் வசித்து வந்த சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வால் நேற்று முன்தினம் காலமானார்.
இவரது மறைவு செய்தியை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினர். நெசப்பாக்கம் மின் மயானத்தில் நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சிதலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஒருசிறந்த இசைக்கலைஞர், எழுத்தாளர் மற்றும் சிறந்த வில்லுப்பாட்டு கலைஞரை தேசம் இழந்துவிட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று ‘வில்லிசைவேந்தர்’ எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கிராமங்களிலிருந்து, நகரங்கள் வரை எல்லாஇடங்களிலும் வில்லுப்பாட்டை கொண்டு சேர்த்தவர் சுப்பு ஆறுமுகம். தேசபக்தி மற்றும் ஆன்மிகப் பாடல்களையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ஆன்மிகத்தையும், தேசபக்தியையும் தன்னுடைய வில்லிசைக் கச்சேரி மூலம் எளிய முறையில் மக்களுக்கு எடுத்துரைத்தவர் சுப்பு ஆறுமுகம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 40 ஆண்டுகளாக தனது வில்லுப்பாட்டினால் தமிழக மக்களைப் பெரிதும் கவர்ந்தவர் சுப்பு ஆறுமுகம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசையின் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைவு வேதனை அளிக்கிறது.
பாமக. நிறுவனர் ராமதாஸ்: வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றையும், இதிகாசங்களையும் வில்லிசையில் படைத்த பெருமைக்கு உரியவர் சுப்பு ஆறுமுகம்.
பாமக தலைவர் அன்புமணி: புராணங்களையும், அரசியல், சமூகபிரச்சினைகளையும் வில்லுப்பாட்டின் மூலம் மக்களுக்கு விளக்கியவர்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி: சுப்பு ஆறுமுகத்தின் தமிழ்த் தொண்டு, கலைத் தொண்டைப் பாராட்டி பெரியார் திடலில் அவருக்கு சிறப்பு செய்துள்ளோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: வில்லுப்பாட்டின் வழியாக விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுச்சியை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியவர்.
வி.கே.சசிகலா: வில்லிசைப் பாடல்களின் மூலம் சமுதாய சிந்தனைகளை பட்டிதொட்டியில் உள்ளபாமரர்களுக்கும் கொண்டு சேர்த்தவர் சுப்பு ஆறுமுகம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.