`கட்சி பிரச்னையைச் சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது' – எடப்பாடியின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்?!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பன்னீர், எடப்பாடி என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதே பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எந்த திசையை நோக்கிப் பயணிக்கிறது என்ற குளறுபடியே இன்னும் நீங்கவில்லை. இதனால், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் மனவேதனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிமுகவைக் கைப்பற்றுவதில் இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக யாருக்கு என்ற போட்டியின் காரணமாக நீதிமன்றத்தில் இரு தரப்பும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது இரு தரப்புக்கும் மாறி மாறி சாதகமாக வந்தது. இந்தச்சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

எம்.எல்.ஏக்கள். ம.செக்கள்

கட்சியின் 51-வது ஆண்டுவிழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்குள் கட்சித் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் பதவியுடன் அதிமுக கொடியை ஏற்ற வேண்டும் என்றும் எடப்பாடி திட்டமிட்டார். ஆனால், எடப்பாடியின் இந்த திட்டத்திற்கு இடி விழுந்தார் போல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அடுத்த வழக்கு விசாரணை வரௌ நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு  நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 17ஆம் தேதி கூடுகிறது. முந்தைய சட்டப்பேரவை வரையில் பன்னீர், எடப்பாடிக்கு முதல்வர் எதிரே ஒரு இருக்கை அமைக்கப்பட்டு அதில் இருவரும் அமர்ந்திருப்பார்கள். ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக இருவரும் ஒரே இருக்கையில் அமர மாட்டார்கள். இதனால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்புக்கு இடையே சட்டமன்றத்தில் பிரச்னைகள் எழலாம் என கருதப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள்

இந்தச்சூழலில் தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்களை அனைவரின் செல்போன்களும் வாங்கிவைக்கப்பட்டது. சிலர் செல்போனை வழங்க மறுத்து கேள்வி கேட்கவே, “தலைமையின் உத்தரவு” என்று கூறியதால் வேறு வழியில்லாமல் செல்போனை கொடுத்துவிட்டு சென்றார்கள். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின் எடப்பாடி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பரபரப்புடன் காணப்பட்டது. 

தலைமை செயலகம்

இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவைகள் குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், “அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழா வரும் 17 ஆம் தேதி நடக்கிறது. 51வது ஆண்டு விழாவை முன்னிட்டு 17, 20, 26 ஆகிய மூன்று நாட்களில் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் வரும் 17 ஆம் தேதி கூட உள்ளது. அப்போது அதிமுக உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக்கூடாது. மக்கள் பிரச்னை, தொகுதி சார்ந்த பிரச்னைகளை மட்டுமே சட்டமன்றத்தில் பேச வேண்டும். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவை நாள்களில் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் எடப்பாடி கூறியுள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அடுத்த மாதம் மதுரை, திருச்சி அல்லது கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். இந்த கூட்டத்தை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்களுடன் பழனிசாமி தனியாக ஒரு ஆலோசனையை நடத்தினார்.

இதில், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

ஆலோசனைக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், “அதிமுகவின் 51வது தொடக்க விழா இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். திமுக இப்போதைக்கு கட்டி வைத்த நெல்லிக்காய் மூட்டை போல் இருக்கிறது. அந்த மூட்டை எப்போது வேண்டுமானாலும் சிதறலாம். மூத்த தலைவர்கள் மதிக்கப்படுவதில்லை என்ற காரணத்தினால் தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகினார். துணைப் பொதுச்செயலாளர் பதவியை கூட வேறு யாருக்கும் கொடுக்காமல் தனது அருமை தங்கைக்கு ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். குடும்பமே கழகம் என்றால் அது திமுக தான். ஆனால், எங்கள் கட்சியினர் ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.