நவீன காலத்திலும் தொடர்கிறது பாரம்பரிய முறை கடலுக்குள் கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்கள் பிடித்து வரப்படும் நடைமுறை இன்றும் தொடர்கிறது.கடலோரங்களில் தென்பட்ட மீன்கள் தூண்டில், ஒற்றை வலை வீசி துவக்கத்தில் பிடிக்கப்பட்டன. நாளடைவில் கட்டுமரம், கரைவலை என தொழில் முறை மாற்றம் பெற்றது. இதிலிருந்து சற்று ஒரு படி மேலே முன்னேற்றமாகி பாய்மரப்படகு, நாட்டுப்படகு என தொழில் செய்யும் யுக்தி மாறியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் விசைப்படகு, பைபர் படகு என படகுகளின் வடிவம் மாறியுள்ளது.

தற்போது பைபர் படகு மூலம் ஆழ்கடல் வரை சென்று மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இந்த மீன்பிடி முறைகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தங்கள் வசதிக்கேற்ப செய்து வருகின்றனர். இவற்றில் கூட்டமாக சேர்ந்து கரை வலை, கடற்கரை ஓரங்களில் அடைப்பு வலை, கூடு வலை பாரம்பரிய மீன்பிடி முறைகளை ஒரு சில மீனவர்கள் தற்போதும் பின்பற்றி வருகின்றனர்.

கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்பிடி முறை மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, கீழக்கரை, சம்பை, வடகாடு, அரியாங்குண்டு, மாங்காடு, ஓலைக்குடா, சங்குமால் உள்ளிட்டபகுதிகளில் இன்றும் பாரம்பரியம் மாறாமல் பின்பற்றப்படுகிறது. ஒருவர் அல்லது இரண்டு, மூன்று பேர் சேர்ந்து கூண்டு வைத்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர். ஒருவர் அதிகபட்சம் 15 கூண்டு வைத்து தொழில் செய்யலாம்.

இந்த வகை மீன்பிடிப்பில், கடலுக்கு அடியில் மீன்கள் கூட்டம், கூட்டமாக சேரும் பாறை நிறைந்த இடங்களை தேர்வு செய்து தங்கள் கூண்டுகளை பாறைகளின் இடுக்குகளில் வைக்கின்றனர். ஆறு அடி முதல் 30 அடி ஆழம் வரை கடலுக்குள் மூழ்கி கூண்டு வைக்கப்படுகின்றன.இக்கூண்டு செய்ய நாட்டு உடைமரம் பயன்படுத்தப்படுகிறது. உடை மர மெல்லிய கிளையில் 30 முதல் 40 குச்சிகளை சேகரித்து குச்சிகளின் மீதான பட்டையை உரித்து கூண்டு பின்னப்படுகிறது. உடை மர கிளைகளின் நுனி பகுதிகளின் பட்டையுடன் குறைந்தது 3 நாள் உலர வைத்து பயன்படுத்துவதால் கூண்டு பின்ன எளிதாக அமைகிறது.

இக்கூண்டில் மீன்கள் புகும் அளவுக்கு நுழைவு பாதை உருவாக்கப்படுகின்றது. இதன் வழியாக கூண்டிற்குள் புகும் மீன்கள் வெளியே வர முடியாது. இக் கூண்டை அதிகபட்சம் 2 ஆண்டு வரை பயன்படுத்தலாம். கூண்டின் அளவை பொறுத்து ரூ.800லிருந்து ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.நாட்டு உடை மரங்கள் கிடைக்காத பட்சத்தில் ஈச்சமரம், பனைவேர், கருவோடை வேர் பயன்படுத்தியும் கூண்டு செய்கின்றனர். நைலான் நரம்பு மூலம் கூண்டு முழு வடிவம் பெறுகிறது. இக்கூண்டுகள் நாட்டுப்படகு, கட்டுமரங்களில் ஏற்றி 6 அடி முதல் 30 அடி ஆழ கடற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மீன்களை கூண்டுக்குள் சிக்க வைக்க கூண்டுக்குள் இறந்து போன நண்டு, கணவாய், சதை நீக்கிய இறால் தலை உள்ளிட்டவை இரையாக வைக்கின்றனர். ஒரு நாள் விட்டு மறு நாள் காலை கடலுக்கு அடியில் சென்று கூண்டை மேலே கொண்டு வந்து அதில் சிக்கிய மீன்கள் கரைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. ஒரு கூண்டில் அதிகபட்சம் 5 கிலோ வரை மீன்கள் கிடைக்கின்றன.

இது குறித்து மண்டபம் டி-நகரை சேர்ந்த மீனவர் கதிரேசன் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் ஏராளமான கடற்பகுதிகளில் பாரம்பரியமாக நடந்த இந்த வகை மீன்பிடி தொழில் நவீன தொழில்நுட்ப மீன்பிடி முறைகளால் தற்போது அழிந்து வருகிறது. கடலில் மூழ்குபவர், கூண்டு பின்னத் தெரிந்தவர்கள் கடலில் எந்த இடத்தில் மீன்கள் சிக்கும் என்ற அனுபவம் கொண்டோரால் கூண்டு மீன்பிடி தொழில் தற்போது நடந்து வருகிறது.

இக்கூண்டில் வோரா, நகரை, விளைமீன், கணவாய், கிளிஞ்சான், கீளி உள்ளிட்ட மீன்கள் சிக்கும். 3 அல்லது 4 பேர் பங்கு பிரிக்கும் போது சொல்லும்படியான வருமானம் இருக்காது. பாரம்பரிய மீன்பிடி தொழிலை விட்டு விடக்கூடாது என்பதற்காக செய்து வருகிறோம் என்றார்.

இரும்பு கூண்டு வாங்க தமிழக அரசு மானியம்

கடலில் இரும்பு வலை மிதவை கூண்டுகள் அமைத்து இருவித மானியத்தில் மீன் வளர்க்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடம் மத்திய அரசு ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்த 80 சதவீதம் மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் கடலில் இரும்பு கூண்டுவலை அமைத்து மீன்வளர்க்கும் திட்டம் தமிழக மீன்வளத்துறை மூலம் செயல்படுத்துகிறது. மண்டபம் வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையம் சார்பில் பரிசோதனை முறையில் மீனவர் 4 பேருக்கு கடல் பகுதியில் இரும்பு கூண்டு வலை அமைத்து கொடுக்க பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கூண்டு வலை அமைக்க ரூ.2 லட்சம், மீன் குஞ்சுகள், அதற்கு தேவையான உணவு, பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.3 லட்சம் என ஒரு கூண்டு வலை அமைத்து மீன் வளர்க்க ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. இத்தொகையில் பிற்பட்ட வகுப்பு மீனவருக்கு 40 சதவீதம், 60 சதவீதம், ஆதிதிராவிட வகுப்பு மீனவருக்கு 60 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இக்கூண்டுகள் மூலம் கொடுவா, கோபியா மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

ஒரு கூண்டில் 1,500 குஞ்சுகள் வரை வளர்க்கலாம். சற்று பருமன் ஆனதும் வேறு கூண்டுகளுக்கு மாற்ற வேண்டும். 6 மாதம் வளர்த்தால் ஒரு மீன் ஒரு கிலோ எடை வரை வளரும். கிலோ ரூ.350 முதல் 420 வரை விலை போவதால் நல்ல லாபம் கிடைக்கும். இத்திட்டத்தில் மீனவர்கள் தனித்தோ, கூட்டு சேர்ந்தோ கூண்டு வலை மீன் வளர்ப்பில் ஈடுபடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.