உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி: சந்திரசூட் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, கொலீஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசித்து இவர்களில் ஒருவரை தலைமை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும்.

அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 7ஆம் தேதி தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூடை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது பரிந்துரைக் கடிதத்தின் நகலை இன்று காலை உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி சந்திரசூடிடம் ஒப்படைத்தார்.

இந்த பரிந்துரை ஏற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்படுவார். நவம்பர் 9ஆம் தேதி அவர் பதவியேற்பார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அவர் இரண்டாண்டுகள் அதாவது 2024ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் டி.ஒய்.சந்திரசூட் நீடிப்பார்.

முன்னதாக, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1998இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், 2016ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகின்றனர். அதேசமயம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.