இஸ்லாமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு நீண்ட காலத்துக்குப் பின் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், லண்டனில் உயர் சிகிச்சைக்காக சென்ற மலாலா உயர் தப்பினார்.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மலாலா இன்று (செவ்வாய்க்கிழமை) கராச்சி வந்தார். தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மலாலா பாகிஸ்தான் வருவது இது இரண்டாவது முறை.
இந்தப் பயணம் குறித்து மலாலா வெளியிட்ட அறிவிப்பில், “பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இந்தப் பயணம் உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களால் மலாலா சுடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், மலாலா தற்போது பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருக்கிறார். “ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும்போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும்” என்று எப்போது கூறும் மலாலாவின் இந்தப் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.