சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போதைய உலக பொருளாதார நிலை குறித்து விவாதிக்கப்படும். தனது பயணத்தின் போது நிதியமைச்சர் அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்துவார். நிதியமைச்சர் G20 நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் சந்திப்பை நடத்துவார்.
இது தவிர, தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் நிதி அமைச்சர் சந்திப்பார். நிமலா சீதாராமன் அக்டோபர் 11-16 வரை தனது ஆறு நாள் அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் ஆகியோரையும் தனித்தனியாக சந்திப்பார். ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூட்டான், நியூசிலாந்து, எகிப்து, ஜெர்மனி, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
இது தவிர, OECD, ஐரோப்பிய ஆணையம் மற்றும் UNDP ஆகியவற்றின் தலைவர்களுடன் நிதி அமைச்சரின் நேரடி சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அக்டோபர் 11, 2022 முதல் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் போது, IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வார். மேலும், G20 நிதி அமைச்சர்களுடன் சந்திப்புகளை நடத்துவார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீதாராமன் தனது பயணத்தின் போது, வாஷிங்டனை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற பொதுக் கொள்கை அமைப்பான ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனில் ‘இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பங்கு’ என்ற நிகழ்வில் கலந்து கொள்கிறார். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) மற்றும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தலைவர்களுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவார்.