இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தொழில்நுட்பம்: பிரதமர் மோடி!

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் ஒருபகுதியாக, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக்கூடாது’ என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதனைக் காணலாம். கடைசி மைலில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அந்தியோதயா என்னும் தொலைநோக்கில் நாங்கள் பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையிலான, வங்கி கணக்கு இல்லாமல் இருந்த 450 மில்லியன் பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையை விட இருமடங்கான 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதியும், 60 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார்.

தொழில்நுட்பமும் திறமையும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கிய இரண்டு தூண்கள் என்று தெரிவித்த பிரதமர் மோடி, “தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகின் முதலாவது நாடாக உள்ளது என்பதை உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம். சிறு வியாபாரிகள் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இதே போல தொழில்நுட்பம் மூலம் கொவிட்-19 காலத்தில் ஏழைகளுக்கு நாங்கள் உதவினோம். தொழில்நுட்ப அடிப்படையிலான ஜன்தன் திட்டம், ஆதார், மொபைல் இணைப்பு, 800 மில்லியன் மக்களுக்கு நலத்திட்டங்களின் பயன்களை தடையின்றி வழங்க உதவியது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமும், தொழில்நுட்பத் தளத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில், தொழில்நுட்பம் என்பது யாரையும் விலக்கி வைப்பதல்ல, எல்லோரையும் சேர்ப்பதாகும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “புவிசார் தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் சேர்த்து முன்னேறுவதை அறிந்து நீங்கள் பெருமகிழ்ச்சியடையலாம். எங்களது ஸ்வமிதா திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துகொள்ளுங்கள். நாங்கள் கிராமங்களில் சொத்துக்களை வரைபடப்படுத்த ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த தரவுகளை பயன்படுத்தி கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களை சொத்து அட்டைகளை பெற்றுள்ளனர். பல பத்து ஆண்டுகளில் முதல் முறையாக கிராம மக்கள் தெளிவான ஆவணங்களுக்கு சொந்தக்காரர்களாகி உள்ளனர். உலகில் எங்கிருந்தாலும் சொத்து உரிமைகள் தான் முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்பதை உங்களில் பலர் அறிவீர்கள். சொத்துக்களின் சொந்தக்காரர்கள் என்ற முக்கிய பயனாளிகளாக பெண்கள் ஆகும் போது இந்த முன்னேற்றம் மேலும் வலுப்படும். இதைத்தான் நாங்கள் இந்தியாவில் செய்துவருகிறோம்.” என்று குறிப்பிட்டார்.

புவிசார் தொழில்நுட்பத்தின் பயன்களை பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஏற்கனவே முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது. எங்களது அண்டை நாடுகளில் தொலைத்தொடர்பு வசதியை அதிகரிக்க எங்களது தெற்காசிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும், கைகோர்த்து செல்வது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை முக்கியமானவை ஆகும். நாம் அனைவரும் ஒரே பூமியைத்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அதனை காப்பாற்றுவதற்கான சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளலாம் என நான் உறுதியளிக்கிறேன். புவிசார் தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளுக்கு அளவே இல்லை. நீடித்த நகர்ப்புற வளர்ச்சி, பேரழிவுகளை நிர்வகித்தல், அவற்றை தணித்தல், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்காணித்தல், வன மேலாண்மை, நீர் மேலாண்மை, பாலைவனமாக்குதலை நிறுத்துதல், உணவுப் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும். புவிசார் தொழில்நுட்பம் மூலம் நமது பூமிக்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. இந்த மாநாடு இது போன்ற முக்கியமான துறைகளில் முன்னேற்றம் குறித்து விவாதிக்கும் தளமாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றும் பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.