2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் ‘செல்லோ ஷோ’. குஜராத்திய திரைப்படமான இதில், கோலி எனும் 10 வயது சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அந்த சிறுவன் கடந்த அக். 2ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரே, அந்த சிறுவன் நீண்ட நாள்களாக லுகேமியா எனும் ரத்தப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், இதில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த சிறுவனின் தந்தை கூறுகையில்,”கடந்த அக்.2ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உணவை சாப்பிட்ட பிறகு, அவனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கடுமையான காய்ச்சலை தொடர்ந்து, மூன்று அவன் ரத்த வாந்தி எடுத்தான். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கள் கண் முன்னே அவனின் உயிர் பிரிந்தது. அவனை இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், வரும் அக். 14ஆம் தேதி அவன் நடித்த ‘செல்லோ ஷா’ (last film show) திரைப்படத்தை அனைவரும் சேர்ந்து பார்க்க செல்கிறோம். அதன்பின்னரே, அவனுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களை செய்ய உள்ளோம்” என்றார்.
‘செல்லோ ஷோ’ திரைப்படம் 80, 90 காலகட்டங்களில் சௌராஷ்டிர கிராமத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு, திரைப்படத்தின் மீது இருக்கும் காதல் குறித்தது. இத்திரைப்படம்தான், 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விழாவிற்கான சிறந்த சர்வதேச முழு நீளத்திரைப்படத்திற்கான பிரிவுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இத்திரைப்படம், இந்தியா முழுவதும் வரும் அக். 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.