MDMK Warns Hindi Imposition: இந்தி திணிப்பில் ஒன்றிய அரசின் அணுகுமுறை தொடர்ந்து இருந்தால் கடந்த 1965 இல் மொழிப்போர் நடந்ததை விட வீரியமிக்க மொழிப்போராக இந்தி ஆதிக்கத்தையும் இந்தி திணிப்பையும் எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டிப்பாக போராட்டம் வெடிக்கும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ எச்சரித்துள்ளார். இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள தேரடி வீதியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மனித சங்கிலியில் நீண்ட வரிசையில் கைகோர்த்து நின்று தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ பேசுகையில், “ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள், அமைப்புகள் அல்ல என்றும், மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவு உணர்வை வளர்க்கும் நாசக்கார சக்திகள் என்றும், இந்தியாவின் அடையாளம் வேற்றுமையில் ஒற்றுமை அப்படி இருக்க ஒரே நாடு, மதம், கலாச்சாரம், உணவு முறை என்று மலிவான பிரிவினை அரசியலை ஆர்.எஸ்.ஸும், பாஜகவும் செய்து வருகின்றனர் என்று விமர்சித்தார். இதுபோன்று மலிவான பிரிவினை அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்றும் எச்சரித்தார்.
உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் பொழுது, ஆங்கிலம் இன்றி முன்னேற்றம் கிடையாது என்றும் இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஆங்கிலத்தின் காரணமாகத்தான் சிறந்து விளங்குகிறார்கள் என்றும் கூறியவர், மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி. நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு மக்களைப் பிரித்து மக்களிடம் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பிரிவினை அரசியலை தொடர்ந்து பாஜகவும் ஆர்எஸ்எஸும் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், தெற்கு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், ஆங்கிலம் அந்நியர்களின் மொழி, ஆங்கிலேயரின் மொழி, இந்திய வளர்ச்சிக்கு எதிராக உள்ள மொழி ஆகையால் ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என சில இயக்கங்கள் கடந்த சில மாதங்களாக கருத்துக்களை விதைத்து வருவதாகவும், உலகமே ஆங்கிலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்திய மாணவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துள்ளதாகவும், எந்த மொழி கற்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் மாணவர்கள் என்றும், முடிவெடுக்கும் உரிமை உள்துறை அமைச்சருக்கோ, ஆர் எஸ் எஸ, பிஹெச்பி போன்ற இயக்கங்களுக்கோ அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்திக்கு எதிரானவர்கள் திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்பவர்கள் தான் நாங்கள் என்றும், 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தி சபாக்கள் இயங்கி வந்ததை சுட்டிக்காட்டிய அவர், ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே உணவு என சர்வாதிகார போக்கில் நாடு சென்று கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தி திணிப்பில் ஒன்றிய அரசின் அணுகுமுறை இருந்தால் கடந்த 1965 இல் மொழிப்போர் நடந்ததை விட வீரியமிக்க மொழிப்போராக இந்தி ஆதிக்கத்தையும் இந்தி திணிப்பையும் எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டிப்பாக போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக ஆளுநர் தமிழக மக்களுக்கு ஆதரவாக செயல்படாமல் அவரது கடமையில் செயல்படாமல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதக்கள் 16 மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு முழு காரணம் ஆளுநர் தான் கொண்டிருப்பதாகவும் என்றும், திருக்குறளுக்கு காவி வேஷம் போட்டு மதத்திற்குள் சுருக்க நினைப்பது தவறான கருத்து என்றும், இந்தியாவை ஆளுநர் அந்நியம் நினைத்தால் பாரதம் எங்களுக்கு அன்னியம் என்றும் கூறினார்.
இந்திய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் மற்றும் அவரைப் போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை மதத்தால் நாட்டு மக்களை பிரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியவர், ஆளுநர் அவர் வேலையை செய்ய வேண்டும் என்றும் இதுபோன்று மதரீதியான கருத்துக்களை சொல்வது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். அதேபோல் திராவிடத்திற்கு ஆளுநர் தற்போது கூறியுள்ள புதிய கருத்து முற்றிலும் தவறானது என்றும், திருக்குறளுக்கு ஒரு அர்த்தம், திராவிடத்திற்கு ஒரு அர்த்தம் என ஆளுநர் கூறி வரும் நிலையில் விரைவில் ராஜராஜ சோழனுக்கும் ஒரு அர்த்தத்தை கூறுவார் என்றும் அவர் விமர்சித்தார்.