தலித் மக்கள் ஆதரவை திரட்ட வேண்டும்: அம்பேத்கரும் இஸ்லாமும்!

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அதில், அம்பேத்கர் கிறித்தவ மதத்திற்கு மாறாமல் ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

அந்தவகையில், தலித் மக்கள் தமக்கான ஆதரவைத் திரட்டவேண்டும் அதற்கு மதமாற்றம்தான் ஒரே வழி என்று அம்பேத்கர் கூறியதாக ரவிக்குமார் எம்.பி., குறிப்பிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவேன் என்று இயோலாமாட்டில் அறிவித்ததற்குப் பிறகு அதைப்பற்றி நாடெங்கும் மிகப்பெரிய ஆர்வம் எழுந்தது. 1936 ஆம் ஆண்டு தாதரில் நடைபெற்ற மாநாட்டில் நிகழ்த்திய உரையில் புரட்சியாளர் அம்பேத்கர் ஒன்றைக் குறிப்பிட்டார். ” இப்போது உங்களுக்கு இருக்கும் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் சாதி இந்துக்களின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியாது. சிறுபான்மையினராக இருப்பதால் இந்த நிலை என நான் சொல்லமாட்டேன். முஸ்லிம்கள் கூடத்தான் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களிடம் வம்புக்குச் செல்ல ஒருவரும் துணிவதில்லை. ஒரு ஊரில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தால்கூட பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் வம்பு செய்தால் இந்தியாவிலிருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்களுக்கு ஆதரவாக வருவார்கள் என்பது சாதி இந்துக்களுக்குத் தெரியும். தலித்துகளை ஒடுக்கினால் அவர்களுக்கு ஆதரவாக எவரும் வரமாட்டார்கள் என்பதால்தான் உங்கள்மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவதில்லை” என்று அம்பேத்கர் சொன்னார். ‘சாதியவாதிகளின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால் தலித் மக்கள் தமக்கான ஆதரவைத் திரட்டவேண்டும்’ என்று சொன்ன அம்பேத்கர், அதற்கு மதமாற்றம்தான் ஒரே வழி என்றார்.

தாதரில் அம்பேத்கர் பேசியதைக் கேட்டவர்கள் அம்பேத்கர் இஸ்லாத்தை ஏற்கப்போகிறார் எனக் கருதினார்கள். இந்து மதப் பற்றாளர்களிடையே அது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களிடையே அது ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. 1931 இல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தீண்டாத மக்களின் மாகாணவாரியான மக்கள் தொகை தெரிய வந்ததால் அவ்வளவுபேரும் தமது மதத்துக்கு வந்தால் தம்முடைய அரசியல் பேர சக்தி அதிகரிக்குமே என்ற எண்ணம் சிறுபான்மை மதத்தினருக்கு ஏற்பட்டது இயல்புதானே.

1936 ஆம் ஆண்டு மே மாதத்தில் பம்பாய் மகர் சமுதாய மக்களின் மாநாடு நடைபெற்றது. அதே மாதத்தில் அனைத்து சமய மாநாடும், அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் மாநாடும் லக்னோவில் நடைபெற்றன. ஏழு மாகாணங்களில் இருந்து 100 பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர் அவர்கள் அம்பேத்கருடைய மதமாற்றத் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக அங்கே கூடி இருந்தனர்.

அந்த மாநாட்டில் 13 மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் எல்லோருமே இந்து மதத்தில் இருந்து வெளியேறப் போகும் பட்டியலினத்தவர்களைத் தங்கள் மதத்தில் சேர்த்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை சொல்வதற்காகவே அங்கு வந்திருந்தனர்.காவி உடை தரித்த பௌத்தர்களும், ஐரோப்பியர்களைப் போல் உடை அணிந்த கிறித்தவ மதத் தலைவர்களும், சீக்கியர்களும், ஜெயினர்களும், ஆரிய சமாஜிகளும் அங்கு கூடியிருந்தனர். அங்கு இருந்த பிரதிநிதிகள் இடையே அவர்கள் தங்களுடைய மதங்களைப் பற்றிய பெருமைகளை எடுத்துக் கூறி அதில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

உடல் நலிவுற்ற காரணத்தினால் புரட்சியாளர் அம்பேத்கர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் ஜாட்பட் தோடக் மண்டல் அமைப்பினரின் மாநாட்டில் பேசுவதற்காக தயாரித்திருந்த புகழ்பெற்ற சாதி ஒழிப்பு என்னும் தலைப்பிலான உரையில் ஒரு பகுதி அங்கே வாசிக்கப்பட்டது. அவர் பங்கேற்காத நிலையிலும் மதமாற்றம் குறித்து ஆராய்வதற்கென அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அம்பேத்கர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதமாற்றம் பற்றிய அம்பேத்கரின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ( Eleanor Zelliot )

மதமாற்றம் குறித்துப் பேசத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தீண்டாதாரின் பாதுகாப்பு குறித்த கவலை அம்பேத்கருக்கு அதிகம் இருந்தது. சீக்கிய மதமும் இஸ்லாம் தான் அந்த பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க முடியும் என்று அவர் கருதினார். அந்த நேரத்தில் ஆரிய சமாஜ், பௌத்தம் போன்ற மதங்கள் அவர்களுக்கான பாதுகாப்பை அளிக்க முடியாது எனவே அவற்றில் சேரப் போவதில்லை என்று அவர் கூறி வந்தார்.

”பௌத்தராகவோ, ஆரிய சமாஜியாகவோ தீண்டாத மக்கள் மாறினால் உயர்சாதியினர் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். உயர்சாதியினரின் வெறுப்பை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நாம் கிறித்தவ மதத்துக்கோ, இஸ்லாம் மதத்திற்கோதான் மாற வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய மதங்களான அவற்றின் ஆதரவைப் பெற வேண்டும். அப்போதுதான் தீண்டாமை என்னும் கறையை நாம் கழுவிக் கொள்ள முடியும்’ என்று அம்பேத்கர் கூறினார்.

அம்பேத்கர் நடத்தி வந்த ‘பகிஷ்கிரித் பாரத்’ பத்திரிக்கையில் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதைப் பற்றி நிறைய செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.1929 மார்ச் 15 ம் தேதியிட்ட இதழில் ’ இந்து மதத்துக்கு ஒரு அறிவிப்பு ‘ என்ற தலைப்பில் தலையங்கக் கட்டுரை ஒன்றை அம்பேத்கர் எழுதியிருந்தார்.அதில் இந்துக்களிடையே சீர்திருத்த இயக்கம் தீவிரமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

“ தீண்டாத மக்கள் இந்து மதத்திலேயே இருப்பதா அல்லது தங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதற்காக இந்து மதத்தை விட்டு வெளியேறுவதா ? என்பது இந்து சமூகத்தில் உள்ள சீர்திருத்த இயக்கம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதைப் பொறுத்தே உள்ளது. இந்து மதத்தை சீர்திருத்தும் இயக்கம் என்பது தீண்டாத மக்கள் கையில் இல்லை. உயர்சாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் சீர்திருத்த இயக்கத்தைக் கையில் எடுத்தால்தான் அது சாத்தியம் ஆகும். உயர்சாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்கள் சமூகத்தில் வகிப்பதாகக் கருதிக்கொள்ளும் செயற்கையான உயர் நிலையைக் கைவிட்டால்தான் அது சாத்தியம். அவர்கள் அந்த மேலாதிக்க நிலையை கைவிட மறுப்பதால் இந்து சமூகத்தில் சாதிகளுக்கு இடையே சச்சரவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தீண்டாத மக்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி வேறு மதத்துக்குச் செல்லப் போவதாகச் சொன்னால் இந்துக்கள் உடனே ஹிந்து தத்துவங்களை எடுத்துக்காட்டி எவ்வளவு தொன்மையான ஒரு மதத்திலிருந்து நீங்கள் வெளியேறக் கூடாது என்று சொல்கிறார்கள். “ எனக் குறிப்பிட்டிருந்த அம்பேத்கர்,

“சமஸ்கிருதத்தில் ஒரு கூற்று உண்டு. இலக்கணத்தை வைத்துக் கொண்டு பசியைத் தீர்க்க முடியாது. கவிதைகளைக் கொண்டு தாகத்தைத் தணிக்க முடியாது. அது இந்து மதத்துக்கும் கூட பொருந்தும். மதம் என்பதற்கான விளக்கம் தான் என்ன? அது இகலோக வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், பரலோகத்தில் மோட்சத்தையும் அடைவது. இந்த உலக வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது தான் இந்த வரிசையில் முதலில் வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தீண்டாத மக்கள் தங்களுடைய விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்து தங்களுடைய திறமையைக் காட்டும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உலக வாழ்க்கையில் முன்னேற்றத்தையோ மேல் உலக வாழ்க்கையில் மோட்சத்தையோ அடைவது என்பது அவர்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றது.” என்று அம்பேத்கர் எடுத்துக் காட்டினார்.

“இந்த உலகத்தில் முன்னேற்றமும் , பொருளாதார வளமும் எங்கு பார்த்தாலும் காணக் கிடைக்கிறது. மறுமை என்பதையோ அங்கு கிடைக்கும் லாபங்களையோ பார்த்தவர்கள் யார்? சாதி இந்துக்கள் ஒருபுறம் தீண்டாமையை நியாயப்படுத்திக் கொண்டு இன்னொரு புறம் இந்து மதத்திலிருந்து தீண்டாதார் வெளியேறக்கூடாது என்று சொல்வது பாசாங்குத்தனம் என்பது தவிர வேறல்ல. இந்த பாசாங்குத்தனத்தை தீண்டாத மக்கள் இப்பொழுது நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.” எனக் குறிப்பிட்ட அம்பேத்கர், இந்துக்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டினார்: “மதவெறியர்கள் மற்றவர்களுடைய துன்பத்தில் தான் இன்பம் அடைவார்கள். ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தங்களுடைய சகோதரர்கள் அங்கே போய் மாட்டிறைச்சி உண்பதை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அங்கே அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்ன குடித்தார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை நல்லபடியாக வழி அனுப்பி வைப்பார்கள், திரும்பி வரும்போது இன் முகத்தோடு வரவேற்பார்கள். தீண்டாதார் ஒருவர் கிறித்தவராகவோ இஸ்லாமியராகவோ மதம் மாறினால் அங்கே அவரை சமமாக நடத்துகிறார்கள். அவருடைய பழைய சாதி என்ன என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

ஆனால் தீண்டாமையை ஒழியுங்கள் என்று சொன்னால் இந்துக்களோ தங்களுடைய சாத்திரங்கள் அதை அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அது தங்களுடைய மூதாதையரின் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் வழக்கம் அதை விட்டு விட முடியாது என்கிறார்கள். தங்களுடைய நலன்களுக்கு முரணாக இருக்கும் தர்ம சாஸ்திரங்களை இந்துக்கள் கைவிடத் தயங்குவதில்லை. ஆனால் தீண்டாமையை மட்டும் புனிதமானதாக சொல்லி விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற போட்டி தீவிரமாகி இருக்கிறது. தங்களுடைய மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து விடும் என்று இந்துக்கள் கவலைப்படுகிறார்கள். அதனால் சுத்தி, சங்காத்தன் முதலான இயக்கங்களை அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

பழமைவாத இந்துக்களை விட இவர்கள் இன்னும் ஆபத்தானவர்கள். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகையை மூட்டியவர்கள். “ என்று அந்தத் தலையங்கக் கட்டுரையில் கூறியிருக்கும் அம்பேத்கர், “ நாம் இவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் நம்முடைய போராட்டத்தைத் தொடர்வோம். இந்து மதத்தில் சீர்திருத்தம் ஏற்படும்வரை அதை விடாமல் தொடர்வோம். இந்துக்களால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கும் தீண்டாத மக்கள் வேறு மதங்களுக்கு மாறுவார்களேயானால் அவர்களை தடுக்கின்ற துணிச்சல் எமக்கு இல்லை. ஜல்கோனில் 5000 மகர் சமூக மக்கள் வேறு மதங்களுக்கு மாறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் இந்து மதத்தில் இருந்து வெளியேறி வேறு மதம் செல்வது என்று நீங்கள் முடிவு செய்தால் இஸ்லாத்தைத் தழுவுங்கள் “ என்று அம்பேத்கர் அந்தத் தலையங்கக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். பௌத்தம் ,ஆரிய சமாஜம், கிறித்தவம் ஆகியவற்றைத் தழுவுவதால் பயனில்லை என்று அப்போது அவர் கருதிவந்தார்.

அம்பேத்கரின் இயோலா அறிவிப்புக்கு சர்வதேச முஸ்லீம் சமூகம் பெரும் வரவேற்பு அளித்தது. அக்டோபர், 1935 இல், கலிபாவின் மத்தியக் குழுவின் பிரதிநிதியான மௌலானா முகமது இர்பான், அம்பேத்கரை அழைத்து, இஸ்லாத்தில் பரிபூரண சமத்துவம் இருப்பதாகவும், மதமாற்றம் இந்தியாவில் உள்ள எட்டு கோடி முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கும் என்றும் உறுதியளித்தார். அதே மாதம், இந்திய உலமா சங்கத்தின் அமைப்பாளரான மௌலானா அஹ்மத் சைட், அம்பேத்கரிடம் “இந்த இயற்கையான மதத்திற்கு நான் உங்களை என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அழைக்கிறேன்; இதில் மட்டுமே உங்கள் நம்பிக்கையை நீங்கள் உணர்வீர்கள்.” எனக் குறிப்பிட்டார்.

அரேபிய பத்திரிகைகள் “தீண்டாதாரின் அரசியல் நகர்வை ஆர்வத்துடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும்” கவனித்து வந்தன. கெய்ரோவிலிருக்கும் அல் அஸார் (Al Azhar ) அமைப்பின் தலைவர் “ இஸ்லாம் மதத்தைத் தழுவும் பட்டியல் சாதியினருக்கு பர்தா அணிவதோ, சுன்னத் செய்துகொள்வதோ கட்டாயமில்லை” என அறிவித்தார். 1936 ஆம் ஆண்டு ஐந்து முஸ்லிம்கள் இந்தியாவில் தீண்டாத வகுப்பினரின் நிலையை ஆராய்வதற்காக கெய்ரோவிலிருந்து இந்தியாவுக்கு வந்தனர், ஆனால் அவர்கள் அம்பேத்கரை சந்தித்தார்களா இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஜூன் 1, 1937 அன்று அவர்கள் அளித்த அறிக்கை, “அல்-அசார் ஏதாவது நேரடியாக செய்யவேண்டுமென்றால் இஸ்லாம் மதத்தின் கொள்கைகளை, கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு சில மையங்களை , தென்னிந்தியாவில் கேரளா; சூரத், வங்காளத்தில் உள்ள டாக்கா, ரங்கூன், நாக்பூர் ஆகிய இடங்களில் நிறுவலாம் எனத் தெரிவித்தது. அந்த மையங்களில் தீண்டாத வகுப்பைச் சேர்ந்த குறைந்தது ஐந்து மாணவர்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும்; லக்னோ, நாக்பூர் ஆகிய இடங்களில் தீண்டாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை சேர்த்துப் பயிற்சி அளிக்கும் உலமா பயிற்சி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த உதவிகள் செய்யப்பட்டதாக இல்லையா எனத் தெரியவில்லை.

அம்பேத்கர் இஸ்லாம் மதத்தில் சேர்வது பற்றி எப்பொழுதும் தீவிரமாக சிந்திக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும், தீண்டாத மக்கள் முஸ்லிமாக மாறுவதற்கான சாத்தியத்தை அவர் மறுத்துவிடவில்லை. “இந்தியாவை இந்து இந்தியா மற்றும் முஸ்லீம் இந்தியா எனப் பிரிக்கவேண்டும்’ என்று பேசப்பட்ட நேரத்தில் 1939, அக்டோபர் 11 ஆம் நாளன்று, “எனது சமூகத்தினர் வேறொரு பெரிய மதத்தினரோடு இணைவதை என்னால் தடுக்க முடியாது ” என்று அம்பேத்கர் கூறினார். ”இந்தியா இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுப்பதற்கும்; தீண்டாத மக்கள், சக்திவாய்ந்ததும் செல்வாக்கு மிக்கதுமான சிறுபான்மை மதம் ஒன்றுடன் இணைவதைத் தடுப்பதற்கும் இப்போதாவது காங்கிரஸுக்கு ஞானமும், அரசியல் திறனும் உதயமாகும் என்று நம்புகிறேன்.” என அவர் குறிப்பிட்டார். (Ambedkar’s Conversion, Eleanor Zelliot,2005 )

ஆனால், காலப்போக்கில் அம்பேத்கருடைய சிந்தனையானது நடைமுறைப் பிரச்சனைகளில் இருந்து மாறி மக்களின் ஆன்மீக ஈடேற்றம் என்பதைப் பற்றி அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்தது. அப்போதுதான் அவர் பௌத்தத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.