புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர்

ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம், புதுவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவையில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமாரவேல், கலியபெருமாள், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், பு.சு.இளங்கோவன், ஜே.வி.எஸ்.சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், மணவெளி தொகுதி நிர்வாகி சன்.சண்முகம், தொகுதி பொறுப்பாளர் ராஜாராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறது. மாநில மொழிகளை அழிக்க இந்தியை திணிப்பது கேடாக அமையும். இந்தி பேசும் மாநிலங்கள் எதுவும் வளர்ச்சியடையவில்லை. அங்குள்ளவர்கள் யாரும் துறை ரீதியாக பெரிய அளவில் புகழ்பெறவும் இல்லை.

இப்போது புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். மொழிவாரியாக இந்தி பேசுவதை அடிப்படையாக வைத்து மாநிலங்களை ஏ,பி,சி என பிரிக்கின்றனர். இதில் தமிழகம், புதுச்சேரி சி பிரிவில் உள்ளது.

உயிர்த்தியாகம்

மத்திய அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இல்லாவிட்டால் எவ்வளவு நாட்களில் இந்தியை கற்றுக்கொள்வார்கள் என்பதை எழுதித்தர வேண்டும். மருத்துவம், என்ஜினீயரிங் பாடங்கள் இந்தியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கைகக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்காக தி.மு.க.வினர் உயிரையும் கொடுத்துள்ளார்கள். அதுபோன்ற உயிர் தியாகத்துக்கும் நாம் தயாராக உள்ளோம். மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. பயப்படாது.

ராஜினாமா செய்யட்டும்

ஊரில் உள்ள ரவுடிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு பா.ஜ.க.வினர் கட்சி நடத்துகிறார்கள். எங்களது உணர்வு மொழி, இனம் சார்ந்தது. பா.ஜ.க.வின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். பூட்டிய மில்கள் திறக்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

பா.ஜ.க. 2024-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவது தொடர்பான கருத்தரங்கில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டுள்ளார். கவர்னர் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

காரைக்கால்

காரைக்கால் தலைமை தபால் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் முகம்மது ரிபாஸ் தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான நாஜிம், நிரவி திருப்பட்டினம் தி.மு.க. பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான நாக தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி அமைப்பாளர் கொன்ன காவேளி பிரபு, சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது ஜாகிர் உசேன், வர்த்தக அணி அமைப்பாளர் கந்தாஸ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.