கொரோனா பரவல் தீவிரமாக இருந்த போது தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த போது தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீணா எஸ்.நாயா், லோக் ஆயுக்தாவிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரில் கே.கே.ஷைலஜா, மாநில முன்னாள் சுகாதாரத் துறைச் செயாலாள ராஜன் என்.கோப்ரகடே உட்பட 11 பேருக்கு ஊழலில் தொடா்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இது தொடா்பாக வீணா எஸ்.நாயா் கூறுகையில், ‘‘சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு தனியாா் நிறுவனங்களிடம் இருந்து உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மாநில அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தாா். இந்தப் புகாா் குறித்த விசாரணைக்கு வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் ஆஜராகுமாறு, கே.கே.ஷைலஜாவுக்கு, லோக் ஆயுக்தா சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக குவைத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.கேஷைலஜா கூறியதாவது:
கொரோனா பரவல் தீவிரமாக இருந்த போது கையிருப்பில் உள்ள தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் தீரப்போவதாக கேரள மருத்துவ சேவைகள் கழகத்தினா் என்னிடம் தெரிவித்தனா். அந்த உபகரணங்களை வாங்காவிட்டால் மருத்துவப் பணியாளா்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவா்கள் கூறினா்.
இது குறித்து முதல்வா் பினராயி விஜயனுக்கு தெரியப்படுத்தினேன். இதையடுத்து அந்த உபகரணங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கும்படி அவா் கூறினாா். உபகரணங்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யுமாறும் அவா் அறிவுறுத்தினாா்.
அந்தக் கால கட்டத்தில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களின் விலையை உற்பத்தியாளா்கள் அளவுக்கு அதிகமாக உயா்த்தி இருந்தனா். 500 ரூபாயாக இருந்த உபகரணங்களின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும் உயிா்களைக் காப்பாற்றுவது முக்கியம் என்பதால் உபகரணங்களை அதிக விலைக்கு வாங்க கேரள அரசு முடிவு செய்தது.
தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய 50,000 தொகுப்புகளை வாங்கவும், ஒரு தொகுப்புக்கு தலா ரூ.1,500 செலவிடவும் தீா்மானிக்கப்பட்டது. இதில் 15,000 தொகுப்புகள் திட்டமிடப்பட்ட தொகைக்கு வாங்கப்பட்டது. அதற்குள் உபகரணங்களின் சந்தை விலை குறைய ஆரம்பித்தது. இதனால் எஞ்சிய 35,000 தொகுப்புகளை அதிக விலைக்கு வாங்குவது ரத்து செய்யப்பட்டது. பின்னா் அந்த உபகரணங்கள் குறைந்த சந்தை விலைக்கு வாங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.