தமிழக அரசியலில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். திமுகவில் இருந்து வைகோ பிரிந்தபோது, அவருடன் சென்ற நாஞ்சில் சம்பத் நீண்ட காலம் மதிமுகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
மதிமுக மேடைகளில் கருணாநிதி, ஜெயலலிதாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் பின்னர், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011ம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகினார்.
இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை சந்தித்து நாஞ்சில் சம்பத் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதிமுகவில் அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
நாஞ்சில் சம்பத் பேச்சு மிகவும் பிடித்து போனதால், இன்னோவா காரை ஜெயலலிதா பரிசளித்தார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவு காரணமாக டிடிவி தினகரனுடன் இணைந்து நாஞ்சில் சம்பத் பயணம் செய்தார்.
இதன் பிறகு டி.டி.வி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அங்கிருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்தே ஒதுங்கினார். தற்போது எந்த கட்சியிலும் சேராமல் உள்ள நாஞ்சில் சம்பத் அவ்வப்போது திமுக மேடைகளில் தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர், திமுக மேடையில் தோன்றி நாஞ்சில் சம்பத் ஒரே போடாய் போட்ட தகவல், எடப்பாடி பழனிசாமியை நடுங்க வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதை கொண்டாடும் வகையில், சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத், ‘அதிமுக ஆட்சி காலத்தில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அம்பேத்கார் பெயரில் அறக்கட்டளை தொடங்குவேன்.
அம்மா வங்கி அட்டை வழங்குவேன். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு இலவச செல்போன், 2 துணைக்கோள் நகரங்கள், மோனோ ரயில் என்று அதிமுக அறிவித்த 100க்கும் மேற்பட்ட திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றவே இல்லை.
தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் கனவில் இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி’ என பேசினார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறி இருப்பது தனக்கே உரிய வழக்கமான ஸ்டைல் என்றாலும் திமுக மேடையில் அமைச்சர் சேகர் பாபுவை வைத்துக்கொண்டு இப்படி பேசியது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், நாஞ்சில் சம்பத் இவ்வாறு கூறி இருப்பது திமுக மேலிடத்தில் பேசிக்கொள்வதன் வெளிப்பாடாகவே இருக்கும் என கருதி எடப்பாடி பழனிசாமி நடுங்கி போய் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் ரகசியம் உடைக்கின்றனர்.