மதுரை: தீபாவளி பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டம் மேலூர் கால்நடை சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கலாம் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலூர் சந்தை பேட்டையில் உள்ள கால்நடை சந்தை வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் கூடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி ஏராளமான கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். விதவிதமான ஆடு, கோழிகளுடன் பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் கூடியதால் சந்தை களைகட்டியது.
சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேலாக வர்த்தகம் நடைபெற்று இருக்கலாம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். சுமார் 500-க்கு மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்திருந்த கால்நடைகளை வாங்க நத்தம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குவிந்து இருந்தனர். வரும் சனிக்கிழமை மாட்டு சந்தையும் தீபாவளியை ஒட்டி ஞாயிறுகிழமை ஆட்டு சந்தையும் நடைபெறுமென மேலூர் சந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.