சென்னை: தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.17) தொடங்கியது. இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஹமீது இப்ராஹீம், கே.கே.வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ்.பி.பச்சையப்பன், எஸ்.புருஷோத்தமன், பே.சு.திருவேங்கடம், தே.ஜனார்த்தனன், பெ.தர்மலிங்கம், எம்.ஏ.ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன், மலேசியா டத்தோசாமி வேலு, மற்றும் இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். இபிஎஸ் தரப்பு புறக்கணிப்பு: அதிமுக பொன் விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க நிகழ்வை முன்னிட்டு, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் யாரும் முதல்நாள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எம்எல்ஏக்கள் யாரும் வராத காரணத்தால், சட்டப்பேரவை இருக்கை ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தார். அவரது தரப்பபைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்நாள் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.