வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ஏலகிரி மலையடிவாரத்தில் கசிவுநீர் குட்டைகள் சீரமைக்கும் பணி தீவிரம்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலை அடிவாரத்தில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்கும் வகையில் கசிவு நீர் கொட்டைகளை வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட ஏலகிரி மலை எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷன நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க செய்கிறது. மேலும் அடர்ந்த காடான ஏலகிரி மலையில் உயர் ரக மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் போன்றவை அடர்ந்து காணப்படுவதால் காட்டுப்பகுதிக்குள் மான், கரடி, குரங்கு, முயல், மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இதனால் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறையினர் ஆங்காங்கே சாலைகளில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் மான் கரடி முயல் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்குள் வருகின்றன. இதனால் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டும்,  நிலப் பகுதிக்குள் வரும்போதும் விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்தும் பலியாகின்றன. மேலும் விவசாய நிலத்தில் உள்ள விவசாய பொருட்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் வனவிலங்குகளை பாதுகாக்கவும் மலையடிவாரங்களில் பொதுமக்களின் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமாவதை தடுக்கவும் மலையடிவாரங்களில் பழுதடைந்து உள்ள கசிவு நீர் குட்டைகளை தூர்வாரி அதில் தண்ணீர் தேக்கி வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கவும் விவசாய நிலங்களில் வருவதை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட ஏலகிரி மலை அடிவாரத்தில் நேற்று பழுதடைந்துள்ள தடுப்பு அணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகளை எதிர் வரும் மழையினை பயன்படுத்தி மழைநீரை சேமித்து, கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கத்துடனும், காப்பு காட்டை ஒட்டிய விவசாயிகளின் நீர் பற்றாக்குறையை தீர்க்கவும் நேற்று முன்தினம் வனத்துறையினர் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் வனவிலங்குகளால் விவசாய பொருட்கள் சேதம் அடைவது தடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.