மேலூர்: மேலூர் கால்நடை வாரச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம், மேலூர் சந்தைபேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் மாடுகளும், திங்கட்கிழமையில் ஆடு மற்றும் கோழிகள் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று வாரச்சந்தை களைகட்டியது.
முதல் நாளில் மாடுகளின் விற்பனை ஓரளவு இருந்த நிலையில், நேற்று ஆடுகளின் விற்பனை கன ஜோராக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள திண்டுக்கல், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகளும் ஆடுகளை வாங்க குவிந்தனர். சராசரியாக ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் ஆடுகள் நேற்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
பெரிய ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆடு ஒன்றை விற்பனை செய்வதற்கு ரூ.70 நுழைவு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். காலை 9 மணி நிலவரப்படி 3,500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இத்துடன் கோழிகளும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது. இரு தினங்களிலும் சேர்த்து ரூ.3 கோடிக்கு மேல் கால்நடை விற்பனை இருந்ததாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.