சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதன்பேரில், சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்ட நிலையில், அப்போது துணைமுதல்வராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்தவருமான ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சசிகலா, உறவினரான டாக்டர் சிவகுமார், சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ், சுகாதாரத்துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உரிய விசாரணை நடத்துவதுடன் சட்ட நிபுணர்கள் ஆலோசனை பெற்று 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணைய அறிக்கை தற்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், ஆணையத்தின் அறிக்கைப்படி, ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, துணைமுதல்ரவராக இருந்த ஓபிஎஸ்-க்கு சிகிச்சை தொடர்பாக அனைத்தும் தெரியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர் முதல்வர் பதவியை விட்டு விலகியதும, தர்மயுத்தம் தொடங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையத்தின் அறிக்கையின்படி, ஓபிஎஸ்.க்கு ஜெயலலிதா மரணம் தொடர்பான அனைத்து விவரங்களும் தெரியும் என்றால், அவர்கள் ஜெ.வுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஊடகங்களில் தெரிவித்திருக்கலாமே. அதை ஏன் தெரிவிக்கவில்லை, யாருக்காக பயந்து அதை தெரிவிக்கவில்லை, உண்மை சொல்ல தயங்கியது ஏன், ஜெயலலிதா மரணத்துக்கும் ஓபிஎஸ்-க்கும் தொடர்பு உண்டா? அல்லது, தெரிந்துகொண்டே மறைத்தாரா என பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.
ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அவசரம் அவசரமாக சசிகலா தரப்பினரால் முதல்வராக பதவி ஏற்றதும், பின்னர், சசிகலாவால் அந்த பதவி பிடுங்கப்பட்டதும், சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், அனைவரும் அறிந்ததே.
இந்த கருத்தை விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. அதனால், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணம் குறித்த அனைத்தும் ஓபிஎஸ்க்கும் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் எதையும் வெளியே தெரிவிக்காமல், பதவிக்காக மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதனால், ஓபிஎஸ்-இடமும் விசாரணை நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆனால், தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், ஓபிஎஸ் பெயர் விடுபட்டுள்ளது சந்தேகங் களை மேலும் வலுப்படுத்தி உள்ளது.