நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கொல்லப்பட்டி, சூரியம்பாளையம் ராஜ கவுண்டம்பாளையம் சாணார்பாளையம், செக்காங்காடு, கொட்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு மர்மமான முறையில் பெரிய அம்மைக்கான அறிகுறி கொப்பளம் போல மாடுகளுக்கு நோய் தாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கொல்லப்பட்டி பகுதியில் கட்டுத்தறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த பிரசவித்து ஒரு ஆண்டே ஆன மாட்டிற்கு தோலில் கட்டி போல் ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து சென்றுள்ளனர்.
இரு தினங்களாக மிகவும் சோர்வாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாடு ரத்தப்போக்கு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, தகவல் அறிந்து வந்த நாமக்கல் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் குழந்தைவேல் தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் சதீஷ்குமார் இருவரும் இறந்த மாட்டினை உடற்கூறு ஆய்வு செய்து நோய்க்கான காரணம் குறித்து கண்டறிய மாதிரிகளை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தடிப்புகள் போல் ஏற்படுவதற்கான காரணம் ஈக்களும் கொசுக்களும் தான் எனவும் பூச்சிகள் பாதிக்கப்பட்ட மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பறந்து வந்து அமரும்போது, இந்த பெரிய அம்மை போன்ற நோயானது அதிக கால்நடைகளுக்கு விரைந்து பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தெரிவித்ததாவது:
திருச்செங்கோடு நகராட்சியில் இருக்குற கழிவு நீர் செல்ல முறையான வழித்தடம் இல்லாமல் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணறு விவசாய வயல்வெளி ஏரி குளங்களில் வந்து நிரம்பி வருவதால், மழைக்காலங்களில் அதிகமான ஈ மற்றும் கொசு தொல்லைகள் காரணமாக, இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு எளிதில் நோய் பரவி கால்நடை விவசாயிகள், பெரிய மனம் உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆண்டுதோறும் இதே போல நடப்பதால் பெரும் வேதனையில் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகமும் அரசும் போர்க்கால அடிப்படையிள் விரைந்து நடவடிக்கை எடுத்து நகராட்சி சாக்கடை கழிவு நீர்கள் வயல்வெளிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்காமல் செல்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வுத்துறை இயக்குனர் குழந்தைவேல் கூறியதாவது:
திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள ராஜ கவுண்டம்பாளையம் கொல்லப்பட்டி சாணார்பாளையம் பகுதியில் இருக்கும், பாதிக்கப்பட்ட மாடுகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில் அது பெரியம்மைக்கான அறிகுறி அல்ல என இதுவரை வந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயானது பரவுவதற்கு கொசு மற்றும் ஈக்களே காரணம் என்றும் தற்போது இறந்துள்ள மாடு ஒரு வருடமே ஆன கன்று என்பதால் அதனால் இந்த நோயின் அலர்ஜியை தாங்க முடியாமல் இறந்திருக்கலாம் என்றும் ஆய்வு முடிவுகள் வந்த பிறகு நோய்க்கான காரணம் குறித்து தெரியவரும் என தெரிவித்தார்.