நடப்பாண்டு இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வு தற்போது நடந்து வரும் நிலையில், இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 446 பொறியியல் கல்லூரிகளில் வெறும் 10 சதவிகிதம் சீட்டுகளுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் 48 கல்லூரிகளில் 50 சதவிகிதம் நிரம்பியுள்ள நிலையில் 12 கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்துக் கல்வியாளர் இராஜராஜனிடம் பேசினோம். “இந்த வருடம் கல்லூரியில் குறைவான இடங்கள் நிரம்பியதற்கான காரணம் தனியார் கல்லூரிகள் நடத்தும் மறைமுக சேர்க்கையும், பெரும்பாலான மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாமையும்தான். அரசு தரப்பிலிருந்து மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு மாடல் பள்ளிகளை அரசு உருவாக்கி, அதில் பல்வேறு மாணவர்களுக்குக் கல்லூரிப் படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும், ஐ.ஐ.டி, நீட் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தியும் வருகிறது. நானும் பல மாதிரிப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே உரையாடியுள்ளேன். இந்தத் திட்டத்தை அடுத்த வருடமும் அரசு விரிவுபடுத்தவுள்ளது. இவ்வளவு விஷயங்களை அரசு செய்தும், கல்லூரிச் சேர்க்கையில் தனியார் கல்லூரியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்களுக்குமே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போதுதான் இந்த நிலைமை மாறும்” என்று தெரிவித்தார்.
கலந்தாய்வு குறித்துப் பேசிய அவர், “இந்த வருடம் மாணவர்கள் கடந்த வருடம் போலவே ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இடங்களும் அதிக அளவில் நிரப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) இணையத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி இரண்டு சுற்றுகள் முடிவில் மொத்தம் 27,740 சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் 18,521 மாணவர்களுக்கு சீட்டு உறுதி செய்யப்பட்டு, கல்லூரிகளுக்கான சேர்க்கை விண்ணப்பம் வெளியிடப்பட்டது. 2043 மாணவர்கள் எந்தக் கல்லூரியையும் தேர்ந்தெடுக்கவில்லை. தற்போது மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 49,043 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.