பொது இடங்களை ஆக்கிரமிப்பது என்பது ஒரு வியாதி; அது மக்கள் மத்தியில் வளரக்கூடாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி-பதில் நேரத்தின் போது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, “ஏரிகளை தூர்வாரிய பிறகு எந்த அளவிற்கு தூர்வாரப்பட்டுள்ளது? எந்த அளவிற்கு ஆழம் இருக்கிறது என அளவீட்டு கருவி வைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். அதேபோன்று “ஏரிகளை குளங்களை சுற்றி வேலி அமைக்க வேண்டும். மேலும் ஏரி குளங்கள் கரையோரத்தில் வீடு கட்டி இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்த கூடாது” என்றும் கோரிக்கை முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “குளங்களையும் ஏரிகளையும் தூர்வாருவதற்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. இதில் வேலி எங்கிருந்து அமைப்பது?” என்று கேள்வி எழுப்பி, “பொது இடத்தை ஆக்கமிப்பது ஒரு வியாதி; மக்கள் மத்தியில் அது வளர விடக்கூடாது. ஏரி மற்றும் குளங்களை ஆக்கரிமிப்பு செய்து வீடு கட்டினால் அதை இந்த அரசு ஏற்காது. அதனை அகற்றும்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் மழையோ மழை பெய்கிறது எனக்கூறி அவருக்கு பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: ”இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?” – முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM