புதுடெல்லி: உலக நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சர்வதேச காவல் துறையான ‘இன்டர்போல்’ அமைப்பின் 90-வது பொதுச் சபைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டம் 25 ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் 195 உறுப்புநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், காவல் துறை மற்றும் புலனாய்வுத் துறை தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இன்டர்போல் அமைப்பு வரலாற்று சிறப்பு மிக்க இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்த அமைப்பு தனது 100-வது ஆண்டை கொண்டாடவுள்ளது. நாம் எதிர்காலத்தையும் மற்றும் கடந்த காலத்தையும் பார்க்க வேண்டிய தருணம் இது. உயர்ந்த எண்ணங்கள் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரட்டும் என எங்களது வேதங்கள் கூறுகின்றன.
உலகளாவிய ஒத்துழைப்பில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. உலகை சிறந்த இடமாக மாற்ற உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். ஐ.நா அமைதி நடவடிக்கைகளில் முன்னணி பங்களிப்பை அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தங்கள் நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்றுதான் உலக நாடுகளும், சமூகங்களும் பார்க்கின்றன.
அச்சுறுத்தல்கள் உலகளாவியதாக இருக்கும்போது, இதற்கான நடவடிக்கை உள்ளூர் அளவில் இருக்க முடியாது. அச்சுறுத்தல்களை முறியடிக்க உலகம் ஒன்றிணைய இது சரியான தருணம். உலகம் முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச வியூகங்களை உருவாக்க வேண்டியது அவசியம். தப்பியோடும் குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ்கள் விநியோகிக்கும்போது, அவர்களின் கைது நடவடிக்கையை விரைவுபடுத்துவதன் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்களை கட்டுப்படுத்த இன்டர்போல் அமைப்பால் உதவ முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நினைவு தபால் தலை, சிறப்பு ரூ.100 நாணயம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
தாவூத்தை ஒப்படைப்பீர்களா?
இக்கூட்டத்தில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை (எப்ஐஏ) தலைமை இயக்குநர் மொஷின் பட் பங்கேற்றார். அவரிடம், ‘‘பாகிஸ்தானில் இருக்கும் மும்பை தாதா தாவூத் இப்ராகிம், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பீர்களா?’’ என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்க மறுத்த பட், விரலை வாயில் வைத்து எதுவும் கேட்கக் கூடாது என சைகை காட்டினார்.