தமிழக அரசு இன்று போக்குவரத்து துறை சம்பந்தமான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலும் பந்தயத்திலும் ஈடுபட்டால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒலி எழுப்ப கூடாத இடங்களில் ஒலி எழுப்பினாலும், அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தினாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி டெல்டா பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தபோது அவர் வருவதற்கு முன்பே போலீசாரால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தது. அமைச்சரின் வாகனங்கள் வந்த பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. அமைச்சர் வருகையால் சைரன் ஒலித்துக்கொண்டிருந்தும் ஆம்புலன்ஸை காத்திருந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இது போன்ற நிகழ்வுக்கு அபராத தொகையை அமைச்சரிடம் வசூலிப்பதா காவல்துறையிடம் வசூலிப்பதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.