இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது – எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை கரம் கொடுத்து தாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது.

இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா பாராட்டு தெரிவித்து உள்ளது.

போராட்ட எச்சரிக்கை

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் அனுரா திசநாயகே, 6 மாதங்களில் இந்தியா வழங்கிய 3.8 பில்லியன் டாலர் உதவியையும், 4 ஆண்டுகளில் சர்வதேச நிதியம் வழங்கப்போகும் 2.9 பில்லியன் டாலர் உதவியையும் ஒப்பிட்டு பேசினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நேரத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி அளித்தது. இல்லையென்றால் இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்’ என்று தெரிவித்தார்.

நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாக கூறிய திசநாயகே, அரசுக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடைபெறக்கூடும் எனவும் எச்சரித்தார்.

சுற்றுலா அழகி போட்டி

இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி போட்டி இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிசம்பர் 8 முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டியை நடத்துவதற்கு இலங்கையுடன் சுமார் 15 நாடுகள் போட்டி போட்டன. கடைசியில் அந்த வாய்ப்பை இலங்கை தட்டிப்பறித்து உள்ளது.

இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்படும் என நாட்டின் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கொரோனா மற்றும் பொருளாதார சிக்கல்களால் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து துவண்டு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனத்துக்கு தடை

இதற்கிடையே இலங்கையில் சட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள பாகியான் சட்டக்குழுமம் என்ற சீன நிறுவனத்தை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்துள்ளது.

இதன் மூலம் அந்த குழுமம் இலங்கையில் எத்தகைய சட்டப்பணிகளை மேற்கொள்ள முடியாததுடன், சட்ட அதிகாரிகளை சந்திக்கவும் முடியாது என இலங்கை அட்டார்னி அலுவலகம் தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.