நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்துவருகிறார். இன்று அவருடைய வீட்டில் விலைமதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவருடைய வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்துவந்த நபர்தான் அதிக விலை மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த புகாரில், 6 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.