பிகார் மாநில அரசியலில் புதுரத்தம் பாய்ச்சும் வகையில் களமிறங்கி இருக்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். பிற கட்சிகளை அரியணையில் ஏற்றுவதற்கு வியூகம் வகுத்து வந்த நிலையில், அனைத்தையும் ஓரங்கட்டி வைத்து விட்டு சொந்த மாநில அரசியலை மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கிறார். எப்படியும் தனிக்கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஜன் சூரஜ் யாத்ரா என்ற பெயரில் 3,500 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை தொடங்கியுள்ளார். தனது பயணத்தின் இடையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் பிகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர்,
நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை வேண்டுமானால் முறித்து விட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் உடன் கைகோர்த்திருக்கலாம். தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வருவதைப் போல தோன்றலாம். ஆனால் பின்னணியில் அப்படி எதுவும் இல்லை. பாஜக உடன் ரகசிய டீலிங்கில் தான் இருக்கின்றனர். இருதரப்பிற்கும் இடையில் தூதுவராக ஐக்கிய ஜனதா தள எம்.பியும், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தனது அரசியல் வாழ்வில் வில்லங்கம் ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் பாஜக உடன் நிதிஷ் குமார் போக தயாராகி விடுவார். புதிய அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள் என பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஹரிவன்ஷ் மறுத்துள்ளார். மேலும் தனது கட்சி மீண்டும் பாஜக உடன் கைகோர்க்க வாய்ப்பில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி தியாகி கூறுகையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஒருபோதும் பாஜக உடன் கைகோர்க்க மாட்டேன் என்று. எனவே பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டை மறுக்கிறோம். அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். நிதிஷ் குமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருக்கிறார்.
ஆனால் பிரசாந்த் கிஷோர் வந்து 6 மாதங்கள் தான் ஆகின்றன. அவர் பேச்சை நம்ப வேண்டாம். பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படியெல்லாம் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். இவ்வாறு மாறி மாறி குற்றம்சாட்டி வருவதால் பிகார் மாநில அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கிறது.