சென்னை: கடந்த 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனியாவது அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு நவம்பரில் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. அதன்படி 84 சதவீத அகவிலைப்படி உயர்வு போக்குவரத்துக் கழக ஊதியர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கம்சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வைவழங்க ரூ.81 கோடி கூடுதலாக செலவாகும் எனவும், நிதி நெருக்கடிதான் அகவிலைப்படி உயர்வு வழங்காததற்கு காரணம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதத்தில்…
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி, அது உண்மையானால், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 34 சதவீதமாக அகவிலைப்படி உயர்வை அரசுஎப்படி அறிவித்தது? என கேள்வி எழுப்பினார். மேலும் நவம்பர் மாதம்முதல் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் பிறப்பித்தார்.
இந்த உத்தரவுப்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை நவம்பர் மாத ஓய்வூதியத்தில் வரவு வைக்கப்படும் என நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்றோர்நல அமைப்பின் பொதுச் செயலர் கே.கர்சன் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர்மாதம், போக்குவரத்து ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 119 சதவீதம் அகவிலைப்படியாக வழங்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.
அதன்பிறகு பிற துறை ஊழியர்களுக்கு 203 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் இந்தஅகவிலைப்படி உயர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் அகவிலைப்படிஉயர்வை வழங்கி, அது தொடர்பான அறிக்கையை 25-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த உத்தரவை அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது, “அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்’’என்றார்.