புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரத்தில், பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அவரது 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்புநீதிமன்றம் 2008-ல் உத்தரவிட்டது.இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் 11 பேரும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சுபாஷினி அலி உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீது குஜராத் அரசு 3 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘குற்றவாளிகள் 11 பேரும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், 1992-ம் ஆண்டின்தண்டனை குறைப்பு கொள்கையின் அடிப்படையில், நன்னடத்தை காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மத்தியஉள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டு அனுமதியும்பெறப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதொடர்பான மனுக்கள் நவம்பர் 29-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 11 குற்றவாளி களின் விடுதலையை எதிர்த்து இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். மேலும் 11 பேரின் விடுதலையை எதிர்த்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இந்த விசாரணையும் நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.