தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு செல்ல உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில்
தீபாவளி
பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் விளக்குள் ஏற்றும் வைபவம் நடைபெறும். நடப்பாண்டில் 6வது தீபோத்சவம் நடைபெறுகிறது. மாநிலத்தில் இரண்டாவது முறையாக
பாஜக
ஆட்சிக்கு வந்ததையொட்டி, பிரம்மாண்டமாக தீபாவளியை கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி இந்தாண்டு அயோத்தியில் தீப உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இவ்விழாவால், அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற லேசர் ஒளி கண்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
விழாவின் நிறைவு நாளான இன்று, ராமர் கோயில் கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வழிபாடு நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில், உலக சாதனை முயற்சியாக 15 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மண் விளக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 22,000 தன்னார்வலர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வை, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, சரயு நதிக்கரையில் நடக்கும் தீப ஆரத்தி, லேசர் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, ரூ.4,000 கோடி மதிப்பிலான 66 திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி அன்று பிரதமர் மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நாளையும் அதே போல் பிரதமர் ராணுவ வீரர்களுடன் கொண்டாடவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை.