மதச்சார்பற்ற நிலைக்கு பாஜக-வால் ஆபத்து: பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்தநாள் விழா, கேக் வெட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. மாநில எஸ்சி அணிசார்பில் ஏற்பாடு செய்திருந்த 71கிலோ கேக்கை வெட்டி, அழகிரிதனது பிறந்தநாளை கொண்டாடினார். அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், ‘காங்கிரஸும், மதசார்பின்மையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அழகிரி பேசியது: காங்கிரஸ், இந்து மதத்துக்கு எதிரான கட்சி என பாஜக தற்போதுதந்திரமாக பரப்புரை செய்து வருகிறது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இறை நம்பிக்கை இல்லாத கட்சிகள். ஆனால், கடவுள் இல்லை என்று காங்கிரஸ் கூறுவதில்லை.

மதத்தாலும், சாதியாலும், மொழியாலும் மக்களை பாஜக பிரித்தாளும்போது, அதன் எதிர்முனையில் இந்த 3 கட்சிகளும் ஒன்று சேர்கின்றன. அதனால், காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது என்று பாஜக பரப்பி வருகிறது. இந்தியா எப்போதும் மதசார்பற்ற நாடு என்பதுதான் காங்கிரஸின் கொள்கையாக இன்றுவரை இருக்கிறது. இந்த மதச்சார்பற்ற நிலைக்கு இன்று பாஜகவால் ஆபத்து வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் எஸ்சி அணி தேசியத் தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, மாநில எஸ்சி அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, திருவள்ளூர் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் விக்டரி எம்.மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விக்டரி எம்.ஜெயகுமார், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஓவிஆர்.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல்வர் வாழ்த்து: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘கே.எஸ்.அழகிரிக்கு எனது இனியபிறந்தநாள் நல்வாழ்த்துகள். காந்தியப் பாதையில் நாட்டின் நல்லிணக்கத்துக்கான அவரது பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடரட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.