உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 8 மாதம் முடிகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும், ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்குவும் நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் போர் விவகாரம் குறித்து பேசினார்கள்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, உக்ரைன் போர் நிலவரம் குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மே 13-ந் தேதிக்கு பின்னர் இவர்கள் இருவரும் பேசி இருப்பது இதுவே முதல் முறை.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் ஊடக செயலாளர் பேட் ரைடர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், “தகவல் தொடர்புக்கான வழிகளை திறந்து வைப்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. அமெரிக்க ராணுவ மந்திரியும், ரஷிய ராணுவ மந்திரியும் கடைசியாக மே மாதம் பேசினர். இந்த நிலையில் இன்று ரஷிய மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் பேச ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்” என தெரிவித்தார். ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் நிலவரம் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு தொடர்பான நடப்பு கேள்விகள் பற்றி விவாதிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.