மானாமதுரை: மானாமதுரை அருகே மிளகனூரில் பெய்த கனமழையில் மண் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மூவர் உயிர் தப்பினர். மானாமதுரை அருகே மிளகனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கலைச்செல்வி (35) இவர் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்கள் இருக்கும் வீடு மண் வீடு என்பதால், நேற்று முன்தினம் பெய்த கனமழையில் வீட்டின் ஒருபகுதி சேதமடைந்து நள்ளிரவு 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் மற்றும் கலைச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே கதவை உடைத்து அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை வருவாய் துறையினர் ஆய்வு செய்து நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘கணவரை இழந்து கூலிவேலை செய்து வரும் கலைச்செல்வியின் வீடும் தற்போது இடிந்து விழுந்துள்ளதால் வீடு இழந்து தவித்து வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்’ என்றனர்.