நடப்பாண்டின் கடைசி சட்டமன்ற தேர்தல்கள் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதில் ஹிமாச்சல் தேர்தலுக்கு தேதி வெளியான நிலையில் குஜராத்திற்கு இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் டிசம்பரில் நடத்தப்பட்டு விடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆளுங்கட்சியான பாஜக மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இம்மாநிலத்தில் 1998ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நீடித்து கொண்டிருக்கிறது.
இதில் நரேந்திர மோடி மட்டும் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரதமராக சென்றுவிட்ட போதிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்து வருகிறது. ஆனால் கடைசியாக 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு சிறிய இறக்கம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் மூன்று இலக்க வெற்றியில் இருந்து சரிந்து இரண்டு இலக்க எண்ணிக்கையிலான வெற்றியை பெற்றது.
இதனால் வரும் தேர்தலை எதிர்க்கட்சிகள் மிகவும் உத்வேகத்துடன் எதிர்பார்த்து வருகின்றன. குறிப்பாக
காங்கிரஸ்
77 என்ற எண்ணிக்கையை மூன்றிலக்கமாக மாற்ற வியூகம் வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. மறுபுறம் புதிய வரவாக ஆம் ஆத்மி கட்சி களமிறங்குகிறது. இதனால் வாக்கு வங்கி நிச்சயம் பிரியும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜக வெற்றிக் கனியை பறித்தாக வேண்டியுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என இருவருக்கும் குஜராத் சொந்த மாநிலம் ஆகும். எனவே இங்கு பெறக்கூடிய வெற்றியானது கவுரவப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. குஜராத் மாடலை முன்வைத்தே நாடாளுமன்ற தேர்தலை மோடி சந்தித்தார். எனவே இம்மாநில தேர்தலில் தோல்வியுற்றால் அது தேசிய அளவில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக தீயாய் வேலை செய்து எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஆகையால் சாதாரண வெற்றியாக இல்லாமல் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150 இடங்களை கைப்பற்ற பாஜக டார்கெட் நிர்ணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வதோதரா சென்றுள்ள அமித் ஷா, மாநில பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதில் குஜராத்தின் மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களின் 52 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிக்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக வல்சாத்தில் தெற்கு மண்டலத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதேபோல் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. பிரதமர் மோடியும் அடுத்தடுத்து குஜராத் மாநிலத்திற்கு வருகை புரியவுள்ளார். இதனால் குஜராத் சட்டமன்ற தேர்தல் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது.