நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை

நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து நேற்று அதிகாலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மகேஸ்வரன், ராஜ்குமார், முனீஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், மீனவர்கள் நேற்று நள்ளிரவு தனுஷ்கோடிக்கும் பாம்பனுக்கும் இடையே 8 நாட்டிக்கல் தென் கிழக்கு கடல் பகுதியில் சூடை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பைப்பர் படகு என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் படகில் இருந்து 9 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
image
இதையடுத்து பலமணி நேரம் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்த நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வீரர்களிடம் மீனவர்கள் உதவி கோரினர். உடனடியாக இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்தனர். பின்னர் மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த இந்திய கடலோர காவல்படையினர் அதை அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
image
என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படை பத்திரமாக மீட்டு வந்தது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.