நாகர்கோவில் : பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.11 லட்சம் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு விவசாயிக்கும் 100 சதவீத மானியத்தில் 50 விதைகள் வழங்கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசினால் ‘பனை மேம்பாட்டு இயக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் கடந்த ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார். 2022-23ம் ஆண்டிலும், தமிழ்நாடு அரசு 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கி, உற்பத்தி செய்யப்படும் பனை ஓலைப் பொருட்கள் மாநில, மாவட்ட சங்கங்களினால் உருப்படி கூலி முறையில் வாங்கப்பட்டு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டம், தமிழ்நாட்டில் ₹2 கோடி 65 லட்சத்தில் செயல்படுத்தப்படும். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருதும் வழங்கப்படும்.
மேலும், 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும் என்றும் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஊராட்சிகளில் பனை மரங்கள் விதை நடவு பணிகள் ஊராட்சி தலைவர்கள், ஊரக வேலை திட்ட பணியாளர்களால் தோட்டக்கலைதுறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை பல இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் ₹11 லட்சத்து 8 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியிருப்பதாவது: பனை மேம்பாட்டு இயக்கத் திட்டம் மூலம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
25 ஆயிரம் பனை விதைகள் விநியோகத்திற்கு ₹75,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் 100 சதவீத மானியத்தில் அதிக பட்சமாக 50 விதைகள் வழங்கப்படும். பனை சார்ந்த சிறுதொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, சுகாதாரமான மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்களைத் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்காக, பனை சார்ந்த சிறு தொழில் முனைவோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில், 160 சதுர அடியில் நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்திட 12 எண்கள் இலக்கிற்கு 50 சதவீத மானியமாக ₹6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இனத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் பனை சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும் மற்றும் அடங்கல் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளி, தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்களைத் தயாரிக்கும் கூடம் ஒன்றிற்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ₹50 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.
மானியத்தில் உபகரணங்கள்
பனை சார்ந்த சிறுதொழில் முனைவோர்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குதல் இனத்தில் எண்ணிக்கை ஒன்றுக்கு ₹4 ஆயிரம் வீதம் 50 எண்ணிக்கைக்கு ₹2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி சொந்த நிலத்தில் பனை சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும் மற்றும் அடங்கல் சமர்ப்பிக்க வேண்டும்.
பயனாளி, தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த இனத்தில் ₹8,000 மதிப்பிலான அலுமினிய அண்டா (100 லிட்டர்), ஈயப்பானை (35 லிட்டர்), கரண்டி (2 ) ஆகிய உபகரணங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
பனை ஏறும் விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் வழங்குதல் இனத்தில் 50 எண்ணிக்கை இலக்கிற்கு ஒன்றுக்கு ₹4500 வீதம் ₹2 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளி பனை ஏறுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த இனத்தில் ₹6 ஆயிரம் மதிப்பிலான தகர பானை (10 லிட்டர்), அரிவாள் (2), முறுக்குத்தட்டி (1), கடிப்பு (2), தளவார் (1), நெஞ்சுவார் (1), கால் வார் (1) ஆகிய உபகரணங்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.