நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என கூறப்படுகிறது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.
நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார். மேலும், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் குழந்தைகள் பிறந்ததால் அங்கு பணி செய்யும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியிருப்பது தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்” என்றார். எனவே இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வருமென்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இதற்கிடையே விசாரணைக் குழுவிடம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அளித்த விளக்கத்தில், தாங்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணத்தையும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய் முறையில் குழந்தை பெறுவதற்கும் பதிவு செய்துவிட்டதாக தெரிவித்தனர் என கூறப்படுகிறது. முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு நேற்று நயனும், விக்னேஷ் சிவனும் தங்களது குழந்தைகளோடு தோன்றி தீபாவளி வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.