எல்லோராலும் விரும்பக்கூடிய உணவாக இருப்பது பிரியாணிதான். இந்த பிரியாணி இப்போது பெரும்பாலான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்துவிடுகிறது. சென்னையில் தெருவிற்கு குறைந்தது இரண்டு பிரியாணி கடைகளை பார்த்துவிட முடியும். அந்த அளவுக்கு மக்களிடம் பிரியாணி மோகம் இருக்கிறது. ஆனால் இந்த பிரியாணியில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் நறுமணப்பொருள்கள் மற்றும் மசாலாவால் ஆண்களின் செக்ஸ் உணர்வு குறைவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இந்த புகார் தமிழ்நாட்டில் எழவில்லை.
மேற்கு வங்கத்தில் எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹார் என்ற இடத்தில்தான் இந்த புதிய புகார் எழுந்திருக்கிறது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரபீந்திரநாத் கோஷ் தன் ஆதரவாளர்களுடன் சென்று பிரியாணி கடைகளை மூடியிருக்கிறார். இது குறித்துப் பேசிய ரபீந்திரநாத் கோஷ், “பிரியாணியில் சேர்க்கப்படும் பொருள்கள் ஆண்களின் தாம்பத்ய உணர்வை குறைப்பதாக இருக்கிறது என்று பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன. கடந்த சில நாள்களாக இப்புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. பிரியாணியில் என்ன பொருள்கள் சேர்க்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் அவை செக்ஸ் உணர்வை குறைப்பதாக இருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்” என்றார். கூச் பெஹார் நகராட்சி தலைவர் இது குறித்து கூறுகையில், “இங்கு பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வந்து பிரியாணி கடை நடத்துகின்றனர். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து அக்கடைகளை சோதித்துப் பார்த்தபோது பிரியாணி கடை நடத்துவதற்கு அவர்களிடம் லைசென்ஸ் இல்லை. எனவே அக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.” பிரியாணி தாம்பத்ய உணர்வை குறைக்கும் என்ற செய்தி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.