லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த பதவியை அலங்கரிக்கிறார். ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சுனக்கிற்கு டுவிட்டர் வழியே வாழ்த்து கூறிய சிலர், அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர். நெஹ்ரா, ஏறக்குறைய தோற்றத்தில் ரிஷி சுனக்கை ஒத்திருக்கும் சூழலில், வாழ்த்து செய்தியில் தவறுதலாக நெஹ்ராவின் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர்.
அதற்கு வலு சேர்க்கும் வகையில், டுவிட்டரில் மீம்ஸ்களும் உலா வருகின்றன. சிறு வயது விராட் கோலியுடன் ஒன்றாக இருக்கும் ரிஷி சுனக் என ஹேஷ்டேக்குடன் புகைப்படம் ஒன்றை கவுரங் பர்த்வா என்பவர் பகிர்ந்து உள்ளார்.
டுவிட்டரில் ஒருவர், ரிஷி சுனக்கும், ஆஷிஷ் நெஹ்ராவும் சகோதரர்கள். கும்பமேளாவில் அவர்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர் என தெரிவித்து உள்ளார்.
ஆஷிஷ் நெஹ்ரா இங்கிலாந்து பிரதமரானது நல்ல விசயம். அப்படியே அந்த கோகினூர் வைரம். அதனை சொந்த நாட்டுக்கு திரும்பி கொண்டு வாருங்கள் என ஒருவர் பதிவிட்டு உள்ளார். ஒரு சிலர் பாலிவுட் நடிகர் ஜிம் சரப் என்பவரையும், ரிஷி சுனக்குடன் ஒப்பிட்டு வருகின்றனர்.