தடம் மாறிய காதலி.. 18 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்த காதலன்..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் விஷ்ணு பிரியா (23). இவர், தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு பிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த பானூர் போலீசார், விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், விஷ்ணு பிரியாவின் வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் கூறினர்.

மேலும், விஷ்ணு பிரியாவின் செல்போனில் இருந்த விவரங்களையும் போலீசார் பரிசோதித்தனர். அதில், கூத்துபரம்பு மானந்தேரி பகுதியை சேர்ந்த சியாம்ஜித் (23) என்பவரின் நம்பர் இருந்தது. இதையடுத்து போலீசார் சியாம்ஜித்தை பிடித்து விசாரித்தனர். இதில் விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; ‘கல்லூரி படிப்பை முடித்துள்ள சியாம்ஜித் அப்பகுதியில் தந்தை நடத்தி வரும் ஹோட்டலில் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். கடந்த 5 வருடங்களாக விஷ்ணு பிரியாவை சியாம்ஜித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், விஷ்ணு பிரியாவுக்கு பொன்னானி பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் சியாம்ஜித்துக்கு தெரிய வந்தது.

இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு சியாம்ஜித்துடன் பேசுவதை விஷ்ணு பிரியா நிறுத்தினார். இதன் காரணமாக இவர் மீதும், அவருடன் நெருக்கமாக இருக்கும் பொன்னானி வாலிபர் மீதும் சியாம்ஜித்துக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதலில் விஷ்ணு பிரியாவையும், பின்னர் அந்த வாலிபரையும் கொல்ல தீர்மானித்தார்.

இதற்காக ஒரு கத்தியும், சுத்தியலும் வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலை விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லை. இந்த சமயத்தில் விஷ்ணு பிரியா பொன்னானி வாலிபருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். சியாம்ஜித்தை பார்த்ததும் விஷ்ணு பிரியா அலறியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் சுத்தியலால் அவரது தலையில் பலமாக அடித்து பின்னர் சரமாரியாக வெட்டியுள்ளார். கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

இதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவர், பைக்கில் வீட்டுக்கு சென்று குளித்துள்ளார். பின்னர் வழக்கம் போல் தந்தையின் கடையில் இருந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். விஷ்ணு பிரியாவை கொலை செய்த பின்னர் அவர் சிக்கி இருக்காவிட்டால் பொன்னானி வாலிபரையும் சியாம்ஜித் கொலை செய்திருப்பார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, விஷ்ணு பிரியாவின் உடல் கண்ணூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது உடலில் பலமான 18 காயங்கள் இருந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் விஷ்ணு பிரியாவின் உடல் அவரது வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் சியாம்ஜித்தை தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.