'சாராய அமைச்சர்' என்ற அண்ணாமலை…ட்விட்டரில் கொதித்தெழுந்த செந்தில் பாலாஜி!

கோவையில் ஞாயிறு அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு விபத்தையடுத்து, தமிழக அரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவையில் குண்டுவெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை @CMOTamilnadu மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா?

கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?

சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?

கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியில் சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா?

அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக @BJP4TamilNadu குரல் கொடுக்கும்.

பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டுவிட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்.

சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை @CMOTamilnadu வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?” என்று தமது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அண்ணாமலையின் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது.

கோவையில் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் உத்தரவின்படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன

அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது” என்று அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தி்ல் பாலாஜி பதிலடி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.