இன்று (25.10.22) அன்று மாலை சூரியகிரகணம் நிகழ இருக்கிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையால் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும் இன்று காலை முதலே நடை அடைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை சூரிய கிரகணம் முடிந்தது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுப் பின்னரே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சூரியகிரகணத்தின் போது சில கோயில்கள் திறந்திருப்பதும் உண்டு. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆந்திர மாநிலம் காளஹஸ்திஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட சில கோயில்கள் நடை திறந்திருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் வழிபாடு செய்வதும் வழக்கம். இந்த ஆண்டு புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருத்தணி சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் ஆகியனவும் திறந்திருக்கும் என்று அந்ததந்தக் கோயில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூதத்தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்கு அமைந்திருக்கும் அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சூரியகிரகணத்தின் போது நடை அடைக்கப்படாமல் வழக்கம். திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிய கிரகணம் தொடங்கும் போது அருணாசலேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நடைபெறுவது உண்டு. எனவே இன்றைய சூரியகிரகணத்தின்போதும் மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும்வேளையில் 4 – ம் பிராகாரத்தில் அமைந்துள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவித்துள்ளனர்.
ராகு கேது பரிகாரத்தலமான ஸ்ரீகாளஹஸ்தியிலும் ஆலயம் திறந்திருக்கும். அந்த வேளையில் காளகஸ்தீஸ்வரரையும் அம்பாளையும் வழிபட்டால் சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பதும் நம்பிக்கை, எனவே இன்று தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர்
அதேபோன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியிலும் இன்று சூரிய கிரகணத்துக்காக நடை அடைக்கப்படாது என்றும் இரவு 9 மணி வரை பக்தர்கள் வழக்கம்போல் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.