'பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்..!' – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வார்னிங்!

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அராஜக செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்,” என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில், இந்திய ராணுவம் சார்பில் நாட்டின் 76 ஆவது காலாட் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சவுரியா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், ஜம்மு – காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து புத்காம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்த தினம், நாம் தீர்மானம் ஒன்றை எடுத்து கொள்வதற்கான ஊக்கத்தினை நமக்கு அளிக்கிறது. அதன்படி, வருங்காலத்தில் எந்த சூழல் வந்தாலும், நம் முன்னால் எத்தனை பிரிவினைவாத சக்திகள் வந்தாலும், அது பற்றி கவலை கொள்ளாமல் அவர்களது சொந்த மொழியிலேயே அதற்கு பதிலளித்து விட்டு, நம்முடைய நாட்டை நாம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகள் என்ற பெயரில் முதலைக்கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தான், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எதிரான அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பின்விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

நமது பகுதிகளை அங்கீகாரமின்றி ஆக்கிரமித்து கொண்ட பாகிஸ்தான், அந்த பகுதி மக்களுக்கு எத்தனை உரிமைகளை வழங்கி உள்ளது என அவர்களை நான் கேட்க விரும்புகிறேன். இந்த பகுதி மக்களின் நலன்களுக்காக என்று கூறி கொண்டு, மனித உரிமைகள் பெயரில் பாகிஸ்தான் முதலைக்கண்ணீர் வடிக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

இந்த மனித தன்மையற்ற சம்பவங்களுக்கு பாகிஸ்தான் நாடே முழு அளவில் பொறுப்பேற்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அராஜகத்திற்கான விதைகளை இன்று விதைக்கும் பாகிஸ்தான், வருங்காலங்களில் முட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 1947 ஆம் ஆண்டில் அகதிகளாக இருந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் போது, அவர்களின் முன்னோர் நிலம் அவர்களிடமே மரியாதையுடன் திருப்பி அளிக்கப்படும் போது இந்த பயணம் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.