மும்பை: மத்திய அரசால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 10 பேரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஹிஸ்புல் முஜாகிதீன் (எச்எம்), லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உட்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்களை மத்திய உள்துறை விவகார அமைச்சகம் (எம்எச்ஏ) கடந்த அக்டோபர் 4-ம் தேதி தீவிரவாதிகளாக அறிவித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் இந்த அறிவிப்பை எம்எச்ஏ வெளியிட்டது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்கிற சாஜித் ஜுட், ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தை சேர்ந்த பஷீத் அகமது ரெசி, ஜம்மு-காஷ்மீரின் சோப்போர் நகரத்தைச் சேர்ந்த (தற்போது பாகிஸ்தானில் உள்ளவர்) இம்தியாஸ் அகமது காண்டூ என்கிற சாஜித், பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த (தற்போது பாகிஸ்தானில் வசிப்பவர்) ஜாபர் இக்பால் என்கிற சலீம், புல்வாமாவைச் சேர்ந்த ஷேக் ஜமீல்-உர்-ரெஹ்மான் என்கிற பிலால் அகமது பெய்க் உள்ளிட்டோர் இந்த 10 தீவிரவாதிகளில் அடங்குவர்.
தீவிரவாதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 10 பேரின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை மத்திய அரசுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.