சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது தீபா என்ற பெண்ணை இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் திருமணம் செய்திருக்கிறார். இதுதான் இன்றைய இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி சம்பவமாக இருந்து வருகிறது. நாட்டில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ திருமணங்கள் நடக்கிறது என்கையில், இதுமட்டும் பேசுபொருளானது ஏன் தெரியுமா? காரணம் இருக்கிறது. அதைப்பற்றி பார்ப்பதே இந்த நெகிழ்ச்சி கட்டுரை!
மகேந்திரன், மகேந்திரன் என்ற B.com, MBA, MPhil, PGDCA முடித்த பட்டதாரி. தீபா MA, BEd படித்துவிட்டு ஆசிரியராக பணி செய்து வந்தவர். இவர்கள் இருவரும் மன அழுத்தத்திற்காக அரசு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வெவ்வேறு காலகட்டங்களில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சிகிச்சை முடிந்து அதே மருத்துவமனையில் ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசர் ஆக மகேந்திரனும், மருத்துவமனையின் பேக்கரி பிரிவில் தீபாவும் பணி செய்து வந்துள்ளனர். அப்போதுதான் ஒருவரையொருவர் சந்தித்திருக்கின்றனர்.
இருவரும் மனம் ஒத்து பழகிய நிலையில், நாள்போக்கில் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இதை தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் முன்னர், இருவரும் அரசு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துமனையில் உடன் பணியாற்றியோரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி அம்மருத்துவமனை இயக்குநர் பூர்ணசந்திரிகா, இரு குடும்பத்திடமும் பேசி இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்தார்.
அந்த ஏற்பாடுகளின்படி இன்று மருத்துவமனை வெளியில் இருக்கும் கோவிலில் தீபாவுக்கும் மகேந்திரனுக்கும் காலை 8.30 மணியளவில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாரதா மேனன் அரங்கில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மணமக்களை வாழ்த்த சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தான் மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்திருந்தார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் ஆகியோரும் மருத்துவத்துறை சார்பில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மனநல காப்பகத்தில் உள்நோயாளிகளாக இருந்து, மன சிக்கல்களிலிருந்து வெளிவந்தோர், மனம் உவந்து காதலால் இணைந்த இந்த நிகழ்வு, பலரின் மனதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சென்னை அயனாவரத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று, குணமடைந்த இருவருக்கு அவ்வளாகத்திலேயே நடைபெற்ற திருமண விழாவில் திருமண பரிசாக மணமக்களுக்கு அந்த மருத்துவமனையிலேயே பணியாற்றிட பணி ஆணைகள் வழங்கப்பட்டது. #masubramanian #TNHealthminister pic.twitter.com/JomiRO7Mqy
— Subramanian.Ma (@Subramanian_ma) October 28, 2022
தம்பதியருக்கு பரிசாக, அவர்கள் இருவரும் அந்த மருத்துவமனையிலேயே பணியாற்றிட பணி ஆணைகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM