ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணையும் ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் ரூ.100 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாக, ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று 3 பேரைக் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் அரசியல் மோதல்கள் அரங்கேறி வருகின்றன. (தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயர் அண்மையில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது).
வரும் நவம்பர் 3-ம் தேதி தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின்படி, இவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மெயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த டெல்லியைச் சேர்ந்த சத்தீஷ் ஷர்மா என்ற ராமச்சந்திர பாரதி, ஹைதராபாத்தைச் சேர்ந்த நந்த கிஷோர் மற்றும் திருப்பதியைச் சேர்ந்த சாமியார் சிம்ஹயாஜி ஆகியோரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து ராஜேந்திர நகர் காவல் உதவி ஆணையர் நிவாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்கூட்டியே ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் மறைந்திருந்து 3 பேரைக் கைது செய்தோம்.
இவர்கள், பாஜகவில் இணையும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவுக்கு தலா ரூ.100 கோடி கொடுப்பதாகவும், உடன் சேரும் மற்ற உயர்மட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 கோடி கொடுப்பதாகவும் பேரம் பேசினர். இதில், டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.
இது வெறும் அரசியல் நாடகம் என்றும், இதற்கு திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்தான் எனவும் பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நந்த கிஷோருக்கு டிஆர்எஸ் கட்சியினருடன் தொடர்பு உள்ளதாகவும், அக்கட்சி நிர்வாகிகளுடன் நந்த கிஷோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெலங்கானா பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.