வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. 14 பசுக்களை அடித்துக் கொன்ற புலி சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். வயநாடு அடுத்த சீரா என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று இரவு வேளையில் கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை அடித்துக் கொன்று வந்தது. இதையடுத்து புலியை பிடிக்க, அதன் நடமாட்டத்தை அறிவதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்த புலி, பசுமாட்டை அடித்து கொன்றுவிட்டு சிறிது தொலைவில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புலியை சுல்தான் பட்டேரியில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். புலியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில நாட்கள் முகாமில் வைத்து பராமரித்த பிறகு புலியை பாதுகாப்பில் வைப்பதா? அல்லது வனத்தில் விடுவிப்பதா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுவரை 14 பசுக்களை கொன்ற புலி சிக்கியதால் சீரா கிராமத்தினர் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.