*போக்குவரத்து நெரிசல் *பொதுமக்கள் கடும் அவதி
கடலூர் : கடலூரில் சாலையை ஆக்கிரமித்து பாஜகவினர் மேடை அமைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடலூரில் பாஜக சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாஜகவினர் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்களில் பாஜக வரவேற்பு போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதுபோன்று நீதிமன்றம் தடை உத்தரவு இருக்கின்ற நிலையில் பாரதி சாலை முழுவதும் விளம்பர பேனர்களாக காட்சியளித்தது.
மாவட்ட காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என தொடர்ந்து பேனர்கள், போஸ்டர்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிப்பை கருத்தில் கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில் விதிமுறை மீறல் பாஜக ஆர்ப்பாட்டத்தில் இதன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாரதி சாலையில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் இடத்தை தாண்டி சாலையிலேயே மேடை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக பாரதி சாலை ஒரு வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது.
பாஜகவின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நேரத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 வரை கடலூர் நகருக்குள் பிரதானமாக சிதம்பரம், புதுச்சேரி, பண்ருட்டி பகுதியில் இருந்து வந்த பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செம்மண்டலம், ஆல்பேட்டை, சீமாட்டி சிக்னல் உள்ளிட்ட பகுதிகளிலேயே திருப்பி விடப்பட்டது.
இதனால் நகருக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டன. சாலையை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்ட மேடை, பேனர்கள், போஸ்டர்கள் பிரதிபலிப்பு என பாஜகவின் ஆர்ப்பாட்ட ஆரவாரத்தால் கடலூர் நகரத்தில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையில் போலீசார் பெரும் சிரமத்துக்கு இடையே சீரமைப்பு பணியை மேற்கொண்டு போக்குவரத்தை சரி செய்தனர். இக்காட்சிகளை கண்ட பொதுமக்கள் முகம் சுளித்தனர்.முன்னதாக பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மேடை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.