அடுத்த தெருவிற்கு செல்பவர்களிடம் அபராதம் வாங்குவது நியாயமே இல்லை – ஜி.கே. வாசன் பேட்டி.!

தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தெரிவித்ததாவது, ”அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக முறையாக எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு பாதுகாப்புத் தேவையை உறுதிப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்போது, பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது. அந்தப் பள்ளம் இருசக்கர வாகனங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்தி ஒரு காலக்கெடுவுக்குள் அந்த பணிகளை எல்லாம் முடிக்கக்கூடிய சூழ்நிலையை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும்.

இதையடுத்து, தமிழக அரசு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்று மக்களுடைய எண்ணங்களை புரிந்துகொள்ளாமல், கரோனாவுக்குப் பிறகு படிப்படியாக உயரும் மக்களுக்கு மிக பெரிய அளவிலே சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனுடைய தாக்கத்தால் மின் கட்டணம், வீட்டு வரி, தண்ணீர் வரி என்று அனைத்தையும் கட்டும் பொழுது மக்கள் படும் அவதி மிகப்பெரிய அவதியாக இருக்கிறது.

மக்களுக்கு கொரோனா தந்த தாக்கத்தை விட தமிழக அரசின் இதுபோன்ற அறிவிப்புகளால் ஏற்படுகின்ற தாக்கம் தான் அதிக அளவில் இருக்கிறது. பொதுவாக வாகனங்களை மிக கவனமாக ஓட்ட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களை மிக கவனமாக ஓட்டக்கூடிய நிலையை ஓட்டுபவர்கள் ஏற்படுத்த வேண்டும். 

வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் என்பது மிகவும் அவசியமான ஒன்று அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவுக்கு செல்பவர்களை எல்லாம் காவல்துறை தடுத்து நிறுத்துவது, அதற்கு அபராதம் வாங்குவதெல்லாம் நியாயமானது இல்லை.

மக்களுக்கு காவல்துறை ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். காவல்துறையினர் இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்தி எல்லோரையும் சங்கடப்படுத்தக்கூடிய நிலை  ஏற்படக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.