10 நாள்கள் பின்தொடர்ந்து கடைசியாக சத்யாவை கொன்றேன்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சத்யா கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை அதிகாரியாக சி.பி.சிஐ.டி காவல் ஆய்வாளர் ரம்யா நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொலையாளி சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த முறை சதீஷை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது வழக்கறிஞர்கள் தாக்க முயன்ற சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி நீதிமன்ற விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்நிலையில் மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலையாளி சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் மட்டுமே காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டார்.

சத்யா கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷை, காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், 10 நாள்கள் பின்தொடர்ந்து சென்று கடைசியாக சத்யாவைக் கொன்றதாக கூறியுள்ளார்.

சதீஷ் மேலும் கூறியிருப்பதாவது, சத்யாவை தான் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால், அவரது பெற்றோர் சத்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றதால், கொன்றதாகவும் கூறியுள்ளார்.

சத்யாவின் தாய் கூறியதால் தன்னுடன் பேசுவதை சத்யா நிறுத்தி விட்டதாகவும், நாள்தோறும் சத்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்றும், கொல்ல மனமில்லாமல் 10 நாள்களாக சத்யாவை பின்தொடர்ந்து சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டதாகவும், இறுதியாக அவரை ரயில் முன் தள்ளிக் கொலை செய்ததாகவும் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.