பணமதிப்பிழப்பு, கொரோனா காலத்தில் கற்ற பாடத்தின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்: புது அவதாரம் எடுக்கும் டிஜிட்டல் கரன்சி, பிளாக்செயின்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு, கொரோனா காலத்தில் கற்ற பாடத்தின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், அதன் அடுத்த கட்டமாக டிஜிட்டல் கரன்சி, பிளாக்செயின் முறைகளை நடைமுறைக்கு ஒன்றிய நிதியமைச்சகம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அல்லது நாணயத்தின் மூலம் நேரடியாக பணப்பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக, செல்போன்கள், கணினிகள், லேப்டாப்கள் அல்லது வேறு ஏதேனும் மின்னணு  பணப்பையின் உதவியுடன் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்கின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014 ஆக. 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பணமதிப்பு நீக்கம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகளவில் நடந்தன. கடந்த 2017ம் ஆண்டு வாக்கில் பெரும்பாலன பணப்பரிவர்த்தனைகள் கிரெடிட்  கார்டுகள், டெபிட் கார்டுகள், காசோலைகள், மொபைல் வாலட்கள் மூலம் நடந்தன.  

இவற்றின் மூலம் 22 சதவீதம் மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. அதே  அடுத்த ஐந்தாண்டுகளில் நிலைமை முற்றிலும் மாறியது. தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடுத்ததாக புதிய கட்டத்தை நோக்கி ஒன்றிய நிதியமைச்சகம் நகர்கிறது. கடந்த 2022-23ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியாவில் விரைவில் இ-ரூபி அறிமுகப்படுத்தப்படும்’ என்றார். ஆனால் அதற்கும் ஒருபடி சென்று ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளுக்கு இசைவு தெரிவித்துள்ளது. அதாவது டிஜிட்டல் கரன்ஸிகளை உருவாக்கவும், பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசனைகளை கூறியுள்ளது. டிஜிட்டல் கரன்ஸி, பிளாக்செயின் குறித்து நிதித்துறை  சார்ந்தவர்கள் புது புது அர்த்தங்களை கூறி வந்தாலும், பொதுமக்கள் மத்தியில்  இன்னும் புரியாத வார்த்தைகளாகவே அவை உள்ளன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறைகளை கண்காணிக்கும் ஏசிஐ வேர்ல்டுவைடின் அறிக்கையின்படி, ‘2020-21ம் நிதியாண்டில் இந்தியாவில் 2,550 கோடி பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெற்றுள்ளன’ என்று கூறியுள்ளது. இந்த தரவுகளின்படி பார்த்தால், உலக அளவில் இந்தியா முதலிடத்திலும், சீனா 1,570 கோடியும், தென் கொரியா 600 கோடியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, ‘2020-21ம் நிதியாண்டில் 5,554 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், 2021-22ம் ஆண்டில் டிஜிட்டல் முறையில் 7,422 கோடி பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறுகிறது.

மேலும் கூகுள் மற்றும் தி பாஸ்டன் கன்சல்டன்சி குழுமத்தின் அறிக்கையின்படி, ‘இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் விகிதம் 15 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் நோட்டுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கருத்தில் கொண்டால், அதன் மதிப்பு நோட்டுகளின் மதிப்புக்கு சமமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி ‘இ-ரூபி’ (டிஜிட்டல் கரன்சி) என்ற தனி நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை தொடங்கி வைத்தார். ‘இ-ரூபி’ என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் நேரடித் தொடர்பில்லா நடைமுறையாகும்.

டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை இல்லாமல், டிஜிட்டல் முறையில் செலுத்தும் செயலி வசதி இல்லாமல் அல்லது நெட் பேக்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை நிதி சேவைகள் துறை, ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகமான என்.பி.சி.ஐ உருவாக்கியுள்ளது. சேவை வழங்குபவர்கள் மற்றும் சேவை பெறுபவர்கள் இடையே எளிமையான முறையில் ‘இ-ரூபி’ முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும், மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் எந்தவொரு சிக்கலும் இன்றி நேரடியாக மக்களுக்கே சென்று சேர ‘இ-ரூபி’ உதவும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. எப்படியாகிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் புதுபுது பரிமாணங்கள் வந்தாலும் கூடவே, டிஜிட்டல் பண மோசடிகளும் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே பணத்தை கையாள வேண்டியுள்ளது.

பணப்பரிவர்த்தனையில் புதுபுது பரிமாணங்கள் வந்தாலும் கூட, டிஜிட்டல் பண மோசடிகளும் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே பணத்தை கையாள வேண்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.